×

தேசிய தடகளம் 200மீ ஓட்டத்தில் பி.டி.உஷா சாதனையை திருச்சி பெண் முறியடிப்பு டுவிட்டரில் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

திருச்சி, மார்ச் 21: திருச்சி குண்டூரை சேர்ந்தவர் தனலெட்சுமி(24). திருச்சி தடகளசங்கத்தின் சார்பில் பயிற்சி பெற்றுவந்த தனலெட்சுமி, சிவகாசியில் நடந்த மாநில அளவிலான வீரர்கள் தேர்வில் கலந்து கொண்டு, தமிழக அணிக்கு தேர்வானார். இதையடுத்து அகில இந்திய தடகள சம்மேளனம் சார்பில பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் கடந்த 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடந்த தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்றார். இவருடன் திருச்சியில் இருந்து மட்டும் 20 பேர் பங்கேற்றனர். இந்நிலையில் தனலெட்சுமி 200மீட்டர் ஓட்டத்தில் அரையிறுதி தேர்வில் 23.26 வினாடிகளில் கடந்து சாதனை புரிந்தார். இதற்கு முன்னர் 1998ம் ஆண்டு 200மீட்டர் ஓட்டத்தில் பி.டி உஷா 23.30 வினாடிகளில் கடந்தது சாதனையாக இருந்தது. தற்போது 23 ஆண்டுகளுக்கு பிறகு பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையை தனலெட்சுமி முறியடித்துள்ளார்.

19ம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் 23.39வினாடிகளில் கடந்து வெள்ளி வென்றார். இந்த போட்டிகளில் வென்றதையடுத்து சர்வதேச போட்டிகளில் விளையாட தகுதி பெற்றார். பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்த தனலெட்சுமியை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். மேலும் அவர், அங்கு நடந்த 100மீட்டர் ஓட்டத்தில் 11.38 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார். இந்த சாதனை தொடர்பாக, மு.க.ஸ்டாலின் நேற்று (மார்ச் 20) தனது டுவிட்டர் பக்கத்தில், “விளையாட்டு வானில் மீண்டும் ஒரு தமிழக நட்சத்திரம்! தடகளப் போட்டிகளில் சாதனை மங்கையாக விளங்கும் திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமிக்கு வாழ்த்துகள். மின்னலென ஓடும் அவரது சாதனைச் சிறகுகள், அவரை மேலும் பல உயரங்களுக்கு அழைத்துச் செல்லட்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதே போல் ஆண்கள் பிரிவில் 200 மீ ஓட்டத்தில், தஞ்சாவூரைச் சேர்ந்த திருச்சி ரயில்வே ரயில்வே ஊழியரான தடகள வீரர் இலக்கியதாசன் தங்க பதக்கமும், 100 மீ ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். அதேபோல் திருச்சியை சேர்ந்த விளையாட்டு வீரர் விக்னேஷ் 200மீ ஓட்டத்தில் கலந்து கொண்டு வெங்கல பதக்கம் வென்றார். இவர்களை திருச்சி தடகள சங்கத்தினர், ரயில்வே ஊழியர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் ரயில் மூலம் திருச்சி வரும் இவர்களுக்கு திருச்சி தடகள சங்கத்தின் சார்பில் இன்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

Tags : MK Stalin ,PD Usha ,National Athletics ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...