×

கோவை அரசு மருத்துவமனையில் 2 ஆண்டில் 150 இருதய அறுவை சிகிச்சை செய்து சாதனை

கோவை, மார்ச் 21: கோவை அரசு மருத்துவமனையில் 2 ஆண்டுகளில் 150 இருதய அறுவை சிகிச்சை செய்து  சாதனை படைத்துள்ளதாக மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதயம், சிறுநீரகம், புற்றுநோய், குழந்தைகள் அதிதீவிர சிகிச்சை பிரிவு உள்பட 30க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. கோவை மட்டுமின்றி அருகிலுள்ள திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்பட மேற்கு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

மேற்கு மாவட்ட மக்களின் உயர் சிகிச்சை மையமாக செயல்படும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு புதிய தொழில்நுட்பக் கருவிகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதன்படி கடந்த 2018ம் ஆண்டு திறந்த இருதய அறுவை சிகிச்சைப் பிரிவு துவங்கப்பட்டது. இந்நிலையில் 2 ஆண்டுகளில் 150 திறந்த இருதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது: கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் திறந்த இருதய அறுவை சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. இதில் பைபாஸ் அறுவை சிகிச்சை, இருதய துடிப்புடன் கூடிய பைபாஸ் அறுவை சிகிச்சை, இருதய வால்பு மாற்று அறுவை சிகிச்சை, இருதய கட்டிகள் அறுவை சிகிச்சை, இருதய ஓட்டைகள் அடைப்பு அறுவை சிகிச்சை, அனைத்து வகையான நுரையீரல் அறுவை சிகிச்சை, நெஞ்சுப் பகுதி அறுவை சிகிச்சை, மூச்சுக்குழாய் அறுவை சிகிச்சை உதரவிதான அறுவை சிகிச்சை உள்பட சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகிறது.

இப்பிரிவில் இதுவரை 150 திறந்த இருதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 83 பைபாஸ் அறுவை சிகிச்சைகள், 42 இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சைகள், 3 இருதய கட்டிகள் அறுவை சிகிச்சைகள், 20 இருதய ஓட்டைகள் அடைப்பு அறுவை சிகிச்சைகள், 2 கூட்டு இருதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு இருதயத்தின் 4 வால்வுகளில் 2 வால்வுகள் அகற்றப்பட்டு மாற்று வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளது. அதே நோயாளிக்கு மற்றொரு வால்வும் சரிசெய்யப்பட்டுள்ளது. மற்றொரு நோயாளிக்கு இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சையும், இருதய பைபாஸ் அறுவை சிகிச்சையும் ஒரே நேரத்தில் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு சிக்கலான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த அறுவை சிகிச்சைகள் அனைத்தையும் இருதய அறுவை சிகிச்சை துறைத் தலைவர் பேராசிரியர் சீனிவாசன், மயக்கவியல் துறைத் தலைவர் கல்யாணசுந்தரம் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Coimbatore Government ,Hospital ,
× RELATED பெண் போலீசார் குறித்து அவதூறு பரப்பிய...