×

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் கழுகுமலைக்கு 2வது பைப் லைன் திட்டம் அமைக்கப்படும்

கழுகுமலை, மார்ச் 20: கோவில்பட்டி தொகுதியில் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த அக்கட்சியின் தென்மண்டல செயலாளர் மாணிக்கராஜா கழுகுமலை பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது கழுகுமலையில் 2வது பைப் லைன் திட்டம் அமைக்கப்படும் என தெரிவித்தார். கோவில்பட்டி தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் பொதுசெயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக கட்சியின் தென்மண்டல அமைப்பு செயலாளரும், தேர்தல் பிரிவு செயலாளருமான மாணிக்கராஜா கயத்தாறு ஒன்றியம், துரைச்சாமிபுரம், வெங்கடேஸ்வரபுரம், லட்சுமிபுரம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று காலை 8 மணிக்கு பிரசாரத்தை துவங்கினார்.

இதையடுத்து, கழுகுமலை பேரூராட்சி பகுதி இந்திரபிரஸ்தம் தெருவிலிருந்து துவங்கி, வட்டத்தெரு, முத்தையன்சேர்வை தெரு, டிப்போ தெரு, காந்தி மைதானம், தேரடி வீதி, கோவில்பட்டி மெயின்ரோடு, அண்ணா புதுத்தெரு, மேலபஜார் ஆகிய பகுதிகளிலும், சமுதாயத்தலைவர்கள் அனைவரிடமும் நடந்தே சென்று அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக மாணிக்கராஜா பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் மக்களிடையே அவர் பேசுகையில், ‘டிடிவி தினகரன் வெற்றி பெற்றதும், கிராமப் புறங்களில் அனைத்து சாலைகளும் முழுமையாக சீரமைக்கப்படும், அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் சரியாக உரிய நேரத்தில் பெண்களுக்கு வழங்கப்படவில்லை.

ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், கோவில்பட்டி தொகுதி மக்களுக்கு கயத்தாறு யூனியனில் வைத்தே தங்கம் வழங்கப்படும், கழுகுமலை பேரூராட்சி பகுதியில் பொது மக்களுக்கு முக்கிய பிரச்னையாக இருப்பது குடிநீர் பிரச்னை. இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு 2ம் பைப் லைன் திட்டம் அமைத்து தரப்படும். இது மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் கோவில்பட்டி தொகுதி முன்மாதிரி தொகுதியாக விளங்கும். மக்களுக்காக உண்மையாக உழைப்பவர் டிடிவி தினகரன். அவருடன் நானும் பணியாற்ற உள்ளேன். மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் நிவர்த்தி செய்ய கழுகுமலையில் அலுவலகம் ஒன்று நிறுவப்படும்.

அங்கு பொதுமக்கள் அனைவரும் 10 நாட்களுக்கு ஒரு முறை என்னை நேரில் வந்து சந்திக்கலாம். இவ்வாறு பேசினார். பிரசாரத்தில், மாவட்ட இளைஞரணி செயலாளரும், ஒன்றிய செயலாளருமான மனோராஜா, மேற்கு ஒன்றிய செயலாளர் கணபதி பாண்டியன், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் சாலைப்புதூர் கருப்பசாமி மற்றும் கட்சி தொண்டர்கள், பொது மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags : DTV Dhinakaran ,Kalugumalai ,
× RELATED கோடை வெப்பம்: குடிநீர், நீர்மோர்...