×

கடமலைக்குண்டு பகுதியில் களைகட்டும் கலப்பட மது விற்பனை கண்டுகொள்ளாத போலீசார்

வருசநாடு, மார்ச் 20: கடமலைக்குண்டு கிராமத்தில் நடக்கும் கலப்பட மது விற்பனையை, போலீசார் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  கடமலைக்குண்டு கிராமத்தில் கடந்த சில நாட்களாக தனி நபர்கள் சிலர் அரசு டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி அதில் கலப்படம் செய்து மதுப்பிரியர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். டாஸ்மாக் கடை திறக்கப்படாத நேரங்களில் கடமலைக்குண்டு கிராமத்தில் மட்டும் தட்டுப்பாடின்றி மதுபாட்டில்கள் கிடைக்கின்றது.  

இதனால் காலை கூலி வேலைகளுக்கு செல்லுபவர்கள் முதல் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள், வரை அனைவரும் கலப்படம் மதுபாட்டில்களை வாங்கி குடித்து போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இது தொடர்பாக போலீசாருக்கு தெரிந்தும் பெரிய அளவில் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. பெயரளவில் மது விற்றதாக அவ்வப்போது சிலரை கைது செய்து 10க்கும் குறைவான மது பாட்டில்களை பறிமுதல் செய்கின்றனர். இதனால் கடமலைக்குண்டு கிராமத்தில் மது விற்பனையை முழுமையாக தடை செய்ய முடியவில்லை.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘கடமலைக்குண்டு கிராமத்தில் 24 மணி நேரமும் மது கிடைப்பதால் பெரும்பாலான இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இதனால், அவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு, அவர்களின் எதிர்காலம் பாதிக்கும் அபாயம் உள்ளது. மேலும், மதுவில் கலப்படம் செய்வதால், அதை குடிப்பவர்களுக்கு உடலில் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதேபோல தாராளமாக மது விற்பனை செய்வதால், பல்வேறு கிராமங்களில் இருந்து மதுப்பிரியர்கள் பைக் உள்ளிட்ட வாகனங்களில் கடமலைக்குண்டு கிராமத்திற்கு வந்து, மது வாங்கிச் செல்கின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு மதுபான அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடமலைக்குண்டு கிராமத்தில் மது விற்பனையை தடுக்க வேண்டும்’ என தெரிவித்தனர்.

Tags : Katamalaikundu ,
× RELATED கடமலைக்குண்டு அருகே மழைக்கு ஒழுகும் அரசு பள்ளி: மாணவ-மாணவிகள் அவதி