×

சித்தரேவில் நிரந்தர கொள்முதல் நிலையம் இல்லாததால் வீணாகும் நெல்கள் உடனே அமைக்க விவசாயிகள் கோரிக்கை

பட்டிவீரன்பட்டி, மார்ச் 20: சித்தரேவில் அரசு கொள்முதல் நிலையம் திறந்தவெளியில் செயல்படுவதால் நெற்பயிர்கள் வெயில், மழை காலங்களில் வீணாகி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு பகுதி விவசாயிகள் விளைந்த நெல்லை சித்தையன்கோட்டையில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களிலும், வியாபாரிகளிடமும் விற்று வந்தனர். சித்தையன்கோட்டைக்கு நெற்களை கொண்டு செல்ல அதிக செலவாகிற காரணத்தினாலும், அப்பகுதி விவசாயிகள் அதிகளவு வருவதால் காலதாமதம் ஏற்படுவதாலும், இடைத்தரகர்களின் குறுக்கீடு இருப்பதாகவும் கூறி சித்தரேவில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்று சித்தரேவில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது.இந்நிலையில் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது வரை நிரந்தர இடம் இல்லை. இதனால் விவசாயிகளின் காலி நிலத்தில் திறந்தவெளியில்தான் செயல்பட்டு வருகின்றன. இதனால் மழை, வெயிலால் அறுவடை செய்யப்படும் நெல்கள் பெருமளவு வீணாகி வருகிறது. எனவே சித்தரேவில் அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு நிரந்தர கட்டிட வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது இந்த கொள்முதல் நிலையத்தில் ஏ கிரேடு ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,888, ஊக்கத்தொகை ரூ.70 சேர்த்து, ரூ.1,958க்கும், பொது- சாதாரண ரகத்திற்கு ரூ.1,868, ஊக்கத்தொகை ரூ.50 சேர்த்து, ரூ.1,918க்கும் விவாசயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு, இதற்கான தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரிடையாக வரவு வைக்கப்படுகின்றது.

Tags : Chittorgarh ,
× RELATED இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்த போது...