×

ஆவடி பாதுகாப்பு துறை தொழிற்சாலைகளை தனியார் மயமாக்கலுக்கு எதிராக குரல் கொடுப்பேன்: திமுக வேட்பாளர் ஆவடி நாசர் வாக்குறுதி

ஆவடி, மார்ச் 19: ஆவடி சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், திமுக வேட்பாளராக போட்டியிடும் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இவர், நேற்று காலை ஆவடி திண் ஊர்தி தொழிற்சாலை பகுதியில் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார்.  அதன் பிறகு, ஆவடி தொகுதிக்கு உட்பட்ட நடுகுத்தகை, நெமிலிச்சேரி ஆகிய ஊராட்சி பகுதிகளில் திறந்த ஜீப்பில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, அவருக்கு பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் தாரை, தப்பட்டை முழங்க, பட்டாசு வெடித்து வரவேற்றனர். அப்போது, தொழிலாளர்கள், பொதுமக்களிடம் ஆவடி நாசர் பேசியதாவது:- கொரோனா தொற்று வைரஸ் காலத்தில் ஆவடி தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் வேலையின்றி தவித்தனர்.  இதனையடுத்து, திமுக சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள், மசாலா பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினோம். இதோடு மட்டுமில்லாமல், தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம், சானிடைசர்,  ஆகியவற்றின் கொடுத்து தொற்றிலிருந்து பாதுகாத்தோம்.

  தொற்று காலத்தில், ஆவடி தொகுதியில் வசிக்கும் 4 லட்சத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நான்கைந்து மாதங்கள் காலை, மதிய உணவு வகைகள், பால், பழங்கள் உள்ளிட்டவைகளை வழங்கி வந்தோம். நாங்கள் ஆட்சியில்  இல்லாத போதே, தொடர்ந்து மக்களுக்கு பல தொண்டுகளை செய்து வருகிறோம். ஆட்சியில் இருந்தால், எவ்வளவு செய்வோம் என நீங்களே எண்ணி பாருங்கள். மேலும், என்னை வெற்றி பெற செய்தால், ஆவடியில் உள்ள பாதுகாப்பு துறை கீழ் இயங்கி வரும் தொழிற்சாலைகளை தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்திட, சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவேன். மேலும்,  நடுகுத்தகை, நெமிலிச்சேரி ஆகிய ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன். எனவே, நீங்கள் அனைவரும் எனக்கு ‘‘உதயசூரியன்” சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். தேர்தல் பிரசாரத்தில் மாநில மாணவர் அணி இணை செயலாளர் பூவை.ஜெரால்டு, மாவட்ட துணைச்செயலாளர் ஜெ.ரமேஷ், பூந்தமல்லி மேற்கு ஒன்றிய செயலாளர் டி.தேசிங்கு, மாநில பொதுக்குழு உறுப்பினர் ம.ராஜி, மதிமுக தேர்தல் பணிச்செயலாளர் வக்கீல் அந்திரிதாஸ், மாவட்ட அவைத்தலைவர் நெமிலிசேரி மு.பாபு, காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் ஜெ.விசுவநாதன், ஆவடி மாநகர தலைவர் இ.யுவராஜ், ஆவடி நகர திமுக பொறுப்பாளர்கள் ஜி.ராஜேந்திரன், பேபி வி.சேகர் ஜி.நாராயணபிரசாத், பொன்.விஜயன்,  மதிமுக மாநகரச்செயலாளர் எஸ்.சூரியகுமார், விடுதலை சிறுத்தை  தொகுதி செயலாளர் ஆவடி மு.ஆதவன், சி.பி.எம் மாவட்ட குழு உறுப்பினர் பூபாலன்,  தொ.மு.ச நாகூர்கனி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் ஊராட்சி செயலாளர்கள், கிளைச்செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.   

Tags : Avadi ,DMK ,Avadi Nasser ,
× RELATED ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட...