×

பணம் பட்டுவாடா புகார் அமைச்சர் சம்பத் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரி ரெய்டு கடலூரில் பரபரப்பு

கடலூர், மார்ச் 19: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் சம்பத்தும், திமுக சார்வில் ஐயப்பனும் போட்டியிடுகின்றனர். அதிமுகவினரிடம் பணம் அதிகமாக புழங்குவதாகவும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடப்பதாகவும் சென்னை வருமான வரித்துறைக்கு புகார் சென்றதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் கடலூரில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து தலா நாலு பேர் கொண்ட 8 குழுக்களாகப் பிரிந்து கடலூர் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் நேற்று காலை 10.30 மணி முதல் அதிமுக நிர்வாகிகள் 8 பேர் வீடுகளில் அதிரடி சோதனையை தொடங்கினர்.

கடலூர் எஸ்.என். சாவடியில் உள்ள ஜெ. பேரவை பொருளாளர் மதியழகன், நகர துணை செயலாளர் கந்தன், முன்னாள் கவுன்சிலர் தமிழ்செல்வன், புதுப்பாளையத்தில் உள்ள வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், ஒன்றியக்குழு தலைவர் தெய்வ.பக்கிரி, பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சுரேஷ், நிர்வாகி கெமிக்கல் மாதவன், சரவணன் ஆகியோர் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்றது. சோதனை மேற்கொள்ளப்பட்ட அனைவரும் அமைச்சர் சம்பத்தின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மாலை 6 மணி வரை வருமானவரித்துறை சோதனை நீடித்தது.  சோதனையின்போது வீட்டின் உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை. உள்ளூர் சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொள்ள சென்ற நிலையில் அவர்களுக்கும் தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் மாலை வரை நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.  

தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. கடலூரில் அமைச்சர் சம்பத் அதிமுக சார்பில் மூன்றாவது முறையாக போட்டியிடும் நிலையில் அதிமுகவினரின் வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Minister Samad ,
× RELATED ஐடி ஊழியர் வீட்டை உடைத்து ரூ.8 லட்சம் நகைகள் கொள்ளை