×

தினமும் நீக்கிக்கொண்டே இருப்பதா? சசிகலா, டிடிவி.தினகரனை அதிமுகவில் சேர்க்க வேண்டும்: வேலுமணி போர்க்கொடி

 

பழநி: தினமும் நிர்வாகிகளை நீக்கிக்கொண்டே இருக்காமல் பிரிந்து சென்றவர்களை, சசிகலா, டிடிவி.தினகரன் உட்பட அனைவரையும் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் அதிமுக எம்எல்ஏ அலுவலகத்தை நேற்று திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: 25 நாட்களுக்கு முன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களுக்கெல்லாம் பொறுப்புகளை அறிவித்தார். அப்போதே தெளிவாக ஒரு கடிதத்தில் நான், நத்தம் விஸ்வநாதன் உள்பட 10 பேர் எங்களுக்கு பதவிகள் வேண்டாமென்று அறிவித்தோம்.

கட்சிக்காக உழைத்தவர்கள், கட்சியின் வெற்றிக்காக உழைத்தவர்கள், எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவதற்கும், பொதுச்செயலாளராக வருவதற்கும் சி.வி.சண்முகம் பல வழக்குகளை சந்தித்தவர். 2 வாரம் மட்டுமே நாங்கள் பிரிந்திருந்தோம். அனைவருக்கும் பழைய பதவிகளை போடுவதாக சொன்ன பிறகே நாங்கள் அமைதியானோம்.

ஆனால், இதுவரை அதுபோல் செய்யவில்லை. அதனால் எடப்பாடி பழனிசாமி கொடுத்த எந்த பதவியையும் ஏற்க போவதில்லை. பொதுக்குழுவை கூட்டி தோல்வி குறித்து ஆராய வேண்டும் என்று கூறியிருந்தோம். ஆனால், இதுவரை எதுவுமே செய்யவில்லை. பொதுக்குழு உறுப்பினர்கள் 200க்கும் மேற்பட்டவர்களை நீக்கிவிட்டார். தினமும் நீக்கி கொண்டே இருக்கிறார். இதெல்லாம் கூடாது.

கண்டிப்பாக கட்சியை பலப்படுத்த வேண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும். சசிகலா, தினகரன் உள்ளிட்டவரையும் சேர்க்க வேண்டும். எங்களுக்கு பழைய பொறுப்புகளை வழங்கி அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும். பொதுக்குழுவை கூட்டுவது குறித்து பொதுச்செயலாளரிடம் தான் கேட்க வேண்டும். அனைவரிடமும் கருத்து கேட்க வேண்டும்.

அதிமுக மூன்றாம் இடத்துக்கு சென்று விட்டது. இன்றும் அதிமுகவில் தான் இருக்கிறோம். அதிமுகவில் உறுப்பினராக இருந்து எங்கள் வேலையை பார்க்கிறோம். திண்டுக்கல் மாவட்டத்தையும், கட்சியையும் வளர்த்த நத்தம் விஸ்வநாதனின் நிலையை பாருங்கள். கட்சியின் உறுப்பினராக மட்டுமே உள்ளார். அனைவரையும் அனுசரித்தால் மட்டுமே கட்சி ஜெயிக்க முடியும்.
இவ்வாறு கூறினார்.

பேட்டியின்போது முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், அன்பழகன், பழநி எம்எல்ஏ ரவி மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.முன்னதாக, ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் தீரன் சின்னமலை சிலைக்கு மாஜி அமைச்சர் வேலுமணி தலைமையில் அதிமுகவினர் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், வேலுமணி மீது அதிருப்தியில் இருந்த தற்போதைய கோவை மாநகர் மாவட்ட செயலாளர் செ.ம.வேலுசாமி உட்பட பலரும் கலந்து கொண்டனர். அப்போது ஒரு தரப்பினர் எடப்பாடி பழனிசாமி வாழ்க என கோஷமிட அதற்கு போட்டியாக எஸ்பி வேலுமணி வாழ்க என மற்றொரு கோஷ்டியினர் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

* அதிமுக தினமும் தேய்ந்து கட்டெறும்பாகி விட்டது

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அளித்த பேட்டியில், ​இந்தியாவிலேயே 3வது பெரிய அரசியல் கட்சியாக இருந்த அதிமுக, எடப்பாடி பொறுப்பேற்ற பிறகு நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே வருகிறது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை என்பார்களே, அதுபோலத்தான் இவருடைய தலைமையில் அதிமுகவின் நிலைமை மாறியுள்ளது. இவர் பொறுப்பேற்றது அதிமுகவின் வளர்ச்சியா அல்லது தளர்ச்சியா என்பதை தலைமை சிந்தித்து பார்க்க வேண்டும். தேர்தல் வரக்கூடும். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

Tags : Sasikala ,DTV ,Dinakarana ,Palani ,Edappadi ,Palanisami ,Dinakaran ,Velumani ,Adimuka ,MLA ,Palaniel district ,Dindigul district ,
× RELATED எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்...