×

6 மாவட்டங்களில் இன்று கன மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சராசரி கடல் மட்டத்திலிருந்து 5.8 கி.மீ உயரத்தில் வட உள்கர்நாடகத்திலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை தென் உள்கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. அதேபோல், சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளிலும் மற்றும் புதுவை பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

மேலும், வருகிற 8ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இன்று ஒரு சில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்.

ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று இன்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Meteorological Department ,Chennai ,Tamil Nadu ,Chennai Meteorological Department ,North… ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து