×

பெருஞ்சாணி அணை மூடப்பட்டது

நாகர்கோவில், மார்ச் 18:  பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்த பெருஞ்சாணி அணை மூடப்பட்டது. குமரி மாவட்டத்தில் ஜூன் முதல் வாரத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இவ்வாறு தண்ணீர் திறந்து விடப்படும் அணைகள் பிப்ரவரி மாதம் கடைசியில் மூடப்படும். பின்னர் மீண்டும் ஜூன் மாதம் முதல் வாரம் திறக்கப்படும். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழாவையொட்டி அணையில் இருந்து தண்ணீர் விநியோகம் நீட்டிக்கப்பட்டு திருவிழா முடியும் வரை தண்ணீர் திறந்து விடப்பட்ட பின்னர் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அணைகள் மூடப்படும்.

இந்தநிலையில் பெருஞ்சாணி அணை நேற்று முன்தினம் மூடப்பட்டது. பேச்சிப்பாறை அணையும் இன்று (18ம் தேதி) மூடப்பட இருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 37.50 அடியாகும். அணைக்கு 506 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 871 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 52.27 அடியாகும். சிற்றார்-1ல் 5.61 அடியும், சிற்றார்-2ல் 5.70 அடியும், பொய்கையில் 19.20 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 18.54 அடியும், முக்கடல் அணையில் 12.4 அடியும் நீர்மட்டம் காணப்படுகிறது.

Tags : Perunchani Dam ,
× RELATED தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் குமரி சிற்றாறில் 4 செ.மீ. மழைப்பதிவு..!!