×

பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழகத்துக்கும், தமிழ் முறைகளுக்கும் பலவிதமான கவுரவம் செலுத்தி வருகிறது: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

 

சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தமிழகத்துக்கும், தமிழ் முறைகளுக்கும் பலவிதமான கவுரவங்களை செலுத்தி வருகிறது என்று ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். சேக்கிழார் ஆராய்ச்சி மையம் மற்றும் ராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் இணைந்து 34ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழாவை கடந்த மாதம் (ஜூலை) 30ம் தேதி முதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று நடந்த விழாவில், சிவாலயம் பதிப்பித்த தருமையாதீன பன்னிரு திருமுறைகள் மற்றும் வென்றிமாலை கவிராயர் அருளிய திருச்செந்தூர் தலபுராணம் உரையுடன் நூல்கள் வெளியிடப்பட்டன.

இதில் திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசன்னிதானம் மாசிலாமணி ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமி கலந்துகொண்டு நூல்களை வெளியிட்டார். நூலின் முதல் பிரதியை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெற்றுக் கொண்டார். விழாவில் திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் 18வது குருமகாசன்னிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசரிய சுவாமி, சேக்கிழார் தலைவர் நீதிபதி எஸ்.ஜெகதீசன், செயலாளர் சிவாலயம் ஜெ.மோகன், திருமயிலை ரசிக ரஞ்சினி சபா தலைவர் ஏ.ஆர்.சந்தானகிருஷ்ணண், தருமையாதீன புலவர்கள் தெ.முருகசாமி, பனசை மூர்த்தி, திருமந்திர திலகம் மா.கி.ரமணன் உள்பட பலர் கலது கொண்டனர்.

நூல்களின் முதல் பிரதியை பெற்றுக்கொண்ட ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:தமிழ் மொழி, தமிழ் இலக்கியத்தை பற்றி பல இடங்களில் பேசுகிறோம். ஆனால் இந்த சைவ திருமுறைகளில் தமிழ் வளத்துக்கு ஈடே இல்லை. ஓலைச்சுவடிகள், செப்பேடுகளில் இருந்த திருமுறைகள் இப்போது நாகரிக மாற்றத்துக்கு ஏற்ப செயலிகள் வந்துவிட்டது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தமிழகத்துக்கும், தமிழ் முறைகளுக்கும் பலவிதமான கவுரவங்களை செலுத்தி வருகிறது.

முதன்முறையாக ஓதுவாமூர்த்திகளுக்கு பத்ம விருது வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு நடந்த ஆடித்திருவாதிரை நாளில் பல ஓதுவார்கள் கவுரவிக்கப்பட்டார்கள். தமிழ்நாட்டில் சைவத்துக்கு அடையாளமாக இருக்கும் ஆதீனங்களை பிரதமர் மோடி தொடர்ந்து கவுரவித்து வருகிறார். முக்கியமாக புதிதாக நிறுவிக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் ஆதீனங்களுடன் பிரதமர் மோடி சென்று செங்கோலை வைத்தார். அதை மறக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Modi ,Tamil Nadu ,Union Minister ,Nirmala Sitharaman ,Chennai ,Sekkizhar Research Centre ,Ramachandra Medical and Research University ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து