- காவிரி
- மேகதாட்டு
- தண்ணீர்
- வளச் செயலாளர்
- சத்ய பிரத சாகு
- பிரதம செயலாளர்
- சாய்குமார்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- நீர் வளங்கள்
- கர்நாடக
சென்னை: தமிழக நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு திடீரென மாற்றப்பட்டுள்ளார். இது காவிரி, மேகதாது பிரச்னையில் சரியாக செயல்படாதது காரணமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு கர்நாடகா காவிரி நீரை திறந்து விடாதது குறித்தும், மேகதாது பகுதியில் அணைக் கட்டுவது குறித்தான பிரச்னைகள் கடந்த சில நாட்களாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
இதையடுத்து முதல்வர் விஜய் பெங்களூருக்கு நாளை சென்று கர்நாடக மாநில முதல்வர் டி.கே.சிவக்குமாரை சந்தித்து பேசுவதாக இருந்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதைப்போன்று கர்நாடகாவிலும், தமிழக முதல்வர் விஜய்யை முதல்வர் டி.கே.சிவக்குமார் சந்தித்து பேசக்கூடாது என்று கடும் எதிர்ப்பு எழுந்தது. கர்நாடகாவில் முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் கட் அவுட்டுகள், போஸ்டர்கள் அனைத்தும் கிழிக்கப்பட்டது.
இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் முதல்வர் விஜய் பெங்களூரு பயணம் ரத்து செய்யப்பட்டது. மேலும் காவிரி பிரச்னை குறித்து கடந்த சில நாட்களாக முதல்வர் விஜய், அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுடன் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வந்தார். இந்த கூட்டங்களில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் என்ற முறையில் சத்யபிரதா சாகுவும் கலந்துகொண்டு தனது கருத்துகளை அரசுக்கு தெரிவித்தார்.இந்த நிலையில் தமிழக அரசு நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகுவை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தலைமை செயலாளர் சாய்குமார் நேற்று ெவளியிட்ட உத்தரவு: நீர்வளத்துறை செயலாளராக இருந்த சத்யபிரதா சாகு ஐஏஎஸ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பிரசாத் வடநேரே நீர்வளத்துறை செயலாளராக நியமிக்கப்படுகிறார். இவர் ஏற்கனவே வகித்து வந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையையும் கூடுதலாக கவனிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நீர்வளத்துறை செயலாளராக இருந்த சத்யபிரதா சாகு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் அவருக்கு என்ன பொறுப்பு தற்போது வழங்கப்படுகிறது என்று அரசாணையில் குறிப்பிடப்படவில்லை. அதே நேரம் காத்திருப்போர் பட்டியலிலும் இருப்பதாகவும் கூறப்படவில்லை. இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
