சென்னை: நாடு முழுவதும் நீட் தகுதி மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான பட்டியலை மத்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதன்படி எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான தேசிய கலந்தாய்வு வரும் 4ம் தேதி முதல் தொடங்கி 17ம் தேதி வரை நடைபெறும்.
அகில இந்திய ஒதுக்கீட்டில் முதல் சுற்று கலந்தாய்வில் இடம் தேர்வு செய்தவர்கள் வரும் 22ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். அதேபோன்று மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு வரும் 13ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடக்கிறது. மாநில ஒதுக்கீட்டிற்கான முதல் சுற்று கலந்தாய்வில் இடம் தேர்வு செய்தவர்கள் வரும் 28ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும்.
இரண்டாவது சுற்றுக்கான தேசிய கலந்தாய்வு வரும் 24ம் தேதி முதல் செப்டம்பர் 2ம் தேதி வரையும், மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 31ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரையும், மூன்றாவது சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி முதல் செப்டம்பர் 18ம் தேதி வரையும், மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு செப்டம்பர் 16ம் தேதி முதல் செப்டம்பர் 26ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நான்கு கட்ட கலந்தாய்வு மற்றும் மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கான வாய்ப்பு அக்டோபர் 10ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்த 72 ஆயிரம் மாணவர்களின் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று மருத்துவ மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.
