பழநி: தொடர் புகார் எதிரொலியாக பழநி சார்பதிவாளர் அலுவலகத்தில் டிஐஜி, ஏஐஜி தலைமையிலான அதிகாரிகள் குழு ஆவணங்களை ஆய்வு செய்தது. 9 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாக தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கினை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தி நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கு தொடர்பாக நிலத்தின் வாரிசுதாரர்கள் உட்பட பலரிடமும் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். சஸ்பெண்ட் ஆன சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் தொடர்ந்து 5வது நாளாக நேற்றும் விசாரணை நடத்தப்பட்டது. பத்திரப்பதிவுத்துறை சார்பில் உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, பழநி சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அலுவலக ஊழியர்களிடம் பல மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ரூ.100 கோடி நில முறைகேடு விவகாரமே பரபரப்பாக இருந்து வரும் சூழலில், பழநியில் சுமார் ரூ.60 கோடி மதிப்பிலான பட்டா மாறுதல் செய்யப்படாத அரசு புறம்போக்கு நிலத்தையும் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று டிஐஜி, ஏஐஜி, மாவட்ட பதிவாளர் பதவிகளில் உள்ள 8க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பழநி சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஜஸ்டின் மணிகண்டன் பத்திரப்பதிவு செய்த ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அவர் பத்திரப்பதிவு மேற்கொண்ட நாளில் பணிபுரிந்த ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. 9 மணி நேரத்திற்கு மேல் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
