×

மீனாட்சி கோயில் சொத்து ரூ.60 கோடி மோசடி விவகாரம்; அறநிலையத்துறை, ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தொடர்பா? விசாரணையில் பகீர் தகவல்

 

மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.60 கோடி நில மோசடி தொடர்பான வழக்கில், ஓய்வு பெற்ற அறநிலையத்துறை, ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கட்டளைக்காக பதியப்பட்ட, மதுரை அழகர்கோவில் ரோட்டில் சொக்கிகுளம் பகுதியில் ரூ.60 கோடி மதிப்பிலான அகோதவிலாஸ் பங்களா மற்றும் தோட்டம் உள்ளிட்ட 1.80 ஏக்கர் நிலத்தை வாடகையை தவிர வேறு வகையில் பயன்படுத்த முடியாது என உயிலில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலத்தை பட்டா மாற்றம் செய்து மோசடி செய்ததாக அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை அளித்த புகாரின்பேரில், மதுரை மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார், 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

மோசடிக்கு பயன்படுத்திய வாரிசு சான்றிதழ் எவ்வாறு பெறப்பட்டது, அதை வழங்கிய அதிகாரிகள் யார், எந்த ஆதாரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை தீவிரமடைந்துள்ளது. பதிவு தொடர்பான ஆவணங்கள், பட்டா, சிட்டா, பத்திரங்கள் மற்றும் வாரிசு சான்றிதழ்கள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 2023ம் ஆண்டு வழங்கப்பட்ட வாரிசு சான்றிதழ் மீது போலீசாரின் கவனம் திரும்பியுள்ளது.

இந்த மோசடியில் வருவாய்த்துறை அதிகாரிகள் அல்லது இடைத்தரகர்கள் யாரேனும் உடந்தையாக இருந்தார்களா என்பதையும் விசாரணை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். தேவையான ஆவணங்களை வருவாய்த்துறையிடம் இருந்து பெற்று, அவற்றை ஒப்பிட்டு சரிபார்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் ஓய்வு பெற்ற அறநிலையத்துறை மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்டமாக தொடர்பில் உள்ளவர்களிடம் விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும், இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வங்கி பரிவர்த்தனைகள், சொத்து பரிமாற்றங்கள் மற்றும் பதிவு ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக மதுரை, புதுக்கோட்டை மற்றும் சென்னையிலுள்ள பதிவுத்துறை அலுவலகங்கள், மதுரை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட டிஆர்ஓக்கள், ஆர்டிஓக்கள், சார்பதிவாளர்கள் உள்ளிட்டோருக்கு விளக்கங்கள் கேட்டு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். இங்கிருந்து கிடைக்கும் ஆவணங்கள் மற்றும் விளக்கங்கள் அடிப்படையிலும் அடுத்தக்கட்ட விசாரணை இருக்கும் எனத் தெரிகிறது.

Tags : Meenakshi Temple ,Endowment Department ,IAS ,Madurai ,Meenakshi Amman Temple ,Madurai Meenakshi Amman Temple ,Madurai Alagarkovil Road… ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து