×

மேகதாது பிரச்னை என்பது உணர்வுப்பூர்வமானது; காவிரி தீர்ப்பை கர்நாடகா மதிப்பதில்லை; முதல்வர் விஜய் வாய் திறப்பதில்லை: எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வலியுறுத்தல்

 

ஓமலூர்: மேகதாது பிரச்னை என்பது உணர்வு பூர்வமானது. காவிரி தீர்ப்பை கர்நாடகா மதிப்பதில்லை. முதலமைச்சர் விஜய் வாய் திறப்பதில்லை. கும்பகர்ணன் போல் தவெக அரசு தூங்குகிறது. இதுதொடர்பாக, அரசியல் கட்சி தலைவர்களை அழைத்து தமிழக முதல்வர் விவாதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.சேலம் விமான நிலையத்தில் நேற்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

காவிரி நதிநீர் பிரச்னையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிற்கு மாதாந்திர தவணையாக கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால், கர்நாடகா அரசு குறிப்பிட்ட காலத்தில் காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில்லை. தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகாவிடம் வாதாடி, போராடி தான் தண்ணீர் பெறக்கூடிய நிலை உள்ளது. தற்போது கர்நாடகாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர், மேகதாதுவில் அணை கட்டியே தீர வேண்டும் என்று தெரிவித்து வருகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டினால், டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களுக்கு காவிரி நீர் குடிநீர் ஆதாரமாக உள்ள நிலையில், கர்நாடக முதலமைச்சர் இவ்வாறு கருத்தை வெளியிட்டுள்ளது வருத்தமளிக்கிறது. தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வரும் 3ம் தேதி அல்லது 5ம் தேதி கர்நாடகாவுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும், ஹெலிகாப்டரில் கர்நாடகாவை சுற்றி பார்த்து விட்டு, பிறகு தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறியதாக செய்தி வந்துள்ளது. அப்படி என்றால், அவர் தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டார் என்பது தான் பொருள். எனவே, கர்நாடகாவுக்கு செல்வதை தமிழக முதலமைச்சர் தவிர்க்க வேண்டும்.

மேகதாது பிரச்னை என்பது உணர்வுபூர்வமானது. இந்த பிரச்னை குறித்து தமிழ்நாட்டில் இருக்கின்ற அரசியல் கட்சி தலைவர்களை அழைத்து விவாதிக்க வேண்டும். முக்கிய விவசாய சங்க தலைவர்களை அழைத்து கருத்துக்களை கேட்டறிந்து, நல்ல தீர்வு காண வேண்டும் என நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன். நான் சொன்ன கருத்துக்களை பல்வேறு கட்சியினர் வரவேற்றுள்ளனர். ஆனால், இதுகுறித்து முதலமைச்சர் எதையும் கண்டுகொள்ளவில்லை.

கர்நாடக அணைகளில் தற்போது 80 டிஎம்சி தண்ணீர் உள்ளது. இந்த சூழ்நிலையில் தண்ணீர் தர மறுக்கிறார்கள். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரியின் குறுக்கே எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றக்கூடாது. இதை தான் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இந்த தீர்ப்பு 15 ஆண்டுகளுக்கு செல்லும். அப்படி இருக்கும் போது, ஏன் மீண்டும் மீண்டும் பிரச்னை செய்கிறார்கள்?. கர்நாடகாவில் யார் முதலமைச்சராக வந்தாலும், தமிழகத்திற்கு தண்ணீர் தராதது கண்டிக்கத்தக்கது.

காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தியும், மேகதாது அணை பிரச்னை குறித்து விரிவான கருத்து பரிமாற்றம் செய்யவும், தவெக அரசு அனைத்து அரசியல் கட்சிகளை அழைத்து, கருத்து கேட்க வேண்டும். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினால் தானே, எங்களது கருத்துக்களை கூற முடியும்?. டெல்டா முக்கிய விவசாய சங்க தலைவர்களை அழைத்து கருத்து கேட்டு, சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்க வேண்டும். ஆனால், இவை எதையும் முதலமைச்சர் செய்யவில்லை. முதலமைச்சர் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு?. தமிழகத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, முதலமைச்சருக்கு உள்ளது. தமிழகத்தில் வறட்சி நிலவிக் கொண்டிருக்கிறது. இதை உன்னிப்பாக கண்காணித்து செயல்பட வேண்டிய தமிழக அரசு வேண்டா வெறுப்பாக செயல்படுவது வருந்தத் தக்கது.

முதலமைச்சர் மவுனப் புரட்சி செய்கிறார். மவுன புரட்சி செய்வதில் முதலமைச்சர் வல்லவர் என நினைக்கிறேன். வறட்சி வருகிறபோது, அதனை எப்படி கையாள்வது?, வறட்சியால் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பொதுமக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என கண்காணித்து, அதற்கு தகுந்தபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம். ஆனால் இந்த அரசு கும்பகர்ணன் போல தூங்கி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* கடன் தள்ளுபடி செய்யாவிட்டால் விவசாயிகளை திரட்டி போராட்டம்

தவெக தேர்தல் அறிக்கையில், விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர்க்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அதற்கு மாறாக நடந்து கொள்வதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விவசாயிகள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். தவெக அரசு விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். வரும் 6ம் தேதி நடக்கும் வேளாண் பட்ஜெட்டில், முதலமைச்சர் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அப்படி வெளியிடப்படாவிட்டால், விவசாயிகளை திரட்டி தமிழ்நாடு தழுவிய மிக பெரிய போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும்’’ என எடப்பாடி தெரிவித்தார்.

* இப்போ மட்டும் மின்கணக்கீடு எப்படி தப்பா வரும்?

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால், அமைச்சர் மின்கணக்கீட்டில் தவறு நடந்ததாக கூறுகிறாரே? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு, ‘‘ஏற்கனவே மின்கட்டணம் கணக்கெடுத்தபோது சரியாக இருந்தது, இப்போது சரியில்லை என்கிறார்கள். மின்கட்டணம் அதிகமாக கட்டி இருந்தால், சரிபார்த்து அடுத்த மாதம் சரி செய்து கொள்ளப்படும் எனக் கூறுகிறார்கள். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு பிரச்னையையும் சரியான முறையில் கையாள வேண்டும். தவெகவை சேர்ந்த பெண் வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர் நியமனம் செய்வதில் லஞ்சம் வாங்குகிறார்கள் என தெரிவித்திருந்தார். அந்த வழக்கறிஞரை கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்’’ என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

 

Tags : Karnataka ,Chief Minister ,Vijay ,Edappadi Palaniswami ,Omalur ,Kumbhakarna ,Tamil Nadu ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து