×

விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்க எதிர்ப்பு; விவசாயிகள் சாலை மறியலில் 4 பெண்கள் தீக்குளிக்க முயற்சி: போலீசாருடன் தள்ளுமுள்ளு: 200 பேர் கைது: சங்க தலைவர்களுக்கு வீட்டுக்காவல்

 

திருப்பூர்: விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 4 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் கைது செய்யப்பட்டனர். சங்க தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் கோவை மாவட்டம் இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரையில் 340 கிலோமீட்டர் தொலைவிற்கு எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இதில், திருப்பூர் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் இருந்து கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரை நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிக்கப்படுகிறது. ஆனால், இருகூரிலிருந்து முத்தூர் வரையிலான 70 கிலோமீட்டர் தூரம் விவசாய விளைநிலங்கள் வழியாக பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதையும் மீறி போலீஸ் பாதுகாப்புடன் நேற்று விவசாய நிலங்களில் குழாய் பதிக்கும் பணிகள் நடந்தன.

இதை கண்டித்தும், இந்த பணிகளை கைவிடக்கோரியும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வேலம்பட்டி டோல்கேட் பகுதியில் விவசாயிகள் திரண்டு, விளைநிலங்களில் குழாய் பதிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும், நெடுஞ்சாலை வழியாக குழாய்களை பதிக்க வேண்டும் என வலியுறுத்தியும் திருப்பூர்-தாராபுரம் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென 4 பெண் விவசாயிகள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். இதனால், விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளும், கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு அலகுமலை பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதுபோல் விவசாயிகள் சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் பலர் வீட்டு காவலிலும் வைக்கப்பட்டனர். இதனால், இந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

 

Tags : Union ,Tiruppur ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து