×

பத்திரிகையாளர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய சோளிங்கர் தவெக எம்எல்ஏ கபிலை கைது செய்ய வேண்டும்: சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

 

சென்னை: செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சோளிங்கர் தவெக எம்எல்ஏ கபிலை கைது செய்ய கோரி சென்னை பத்திரிகையாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் தமிழக முதல்வர் நடித்த ஜனநாயகன் திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படத்தை சோளிங்கர் தவெக எம்எல்ஏ கபில், தனது ஆதரவாளர்களுடன் பார்த்துவிட்டு வெளியே வந்தார். அப்போது, யூடியூபர் ஒருவர் திரைப்படம் குறித்து எம்எல்ஏ கபிலிடம் கருத்து கேட்டுள்ளார்.

அப்போது எம்எல்ஏ கபில், யூடியூபர் சிவாவை தாக்க முயன்றுள்ளார். இதுகுறித்து வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதைதொடர்ந்து மறுநாள் எம்எல்ஏ கபில் மற்றும் அவரது சகோதரர் தனஞ்செழியன் ஆகியோர் யூடியூபர் சிவா வீட்டிற்கு சென்று தாக்கியுள்ளனர். இதுகுறித்து செய்தி வெளியானதை தொடர்ந்து தினமலர் நிருபர் கல்யாணசுந்தரம் மற்றும் தினகரன் நிருபர் அரங்கநாதன் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது எம்எல்ஏ கபில் தனது சகோதரர் உள்பட 10 பேர் சேர்ந்து இரண்டு நிருபர்களையும் கடுமையாக தாக்கினர். இதில் 2 பேரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.இதையடுத்து தவெக எம்எல்ஏ கபில் பத்திரிகை சுதந்திரத்தை நெரித்து தாக்குதல் நடத்தியதற்கு ‘சென்னை பத்திரிகையாளர் மன்றம்’ உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சோளிங்கர் தவெக எம்எல்ஏ கபில் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய கோரி நேற்று சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ‘சென்னை பத்திரிகையாளர் மன்றம்’ முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பெண் பத்திரிகையாளர்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களும் கலந்துகொண்டு எம்எல்ஏ கபிலை கைது செய்ய கோரி கோஷம் எழுப்பினர்.

சென்னை பத்திரிகையாளர் மன்றம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மூத்த பத்திரிகையாளர்கள் இந்து ராம், நக்கீரன் கோபால், குமரேசன், மணி, கோட்டீஸ்வரன், அரவிந்தாக்சன், சுரேஷ் வேதநாயகம், ஹசீப், வினோத் மற்றும் சென்னை பத்திரிகையாளர் சங்கம், தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், தமிழ்நாடு பத்திரிகையாளர் யூனியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

Tags : Chennai Press Association ,Sholingar Thaveka ,MLA Kapil ,Chennai ,MLA ,Kapil ,Tamil Nadu… ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து