×

இருளில் மூழ்கிய சோமங்கலம் ஊராட்சி: அதிகாரிகள் அலட்சியம்


பெரும்புதூர், மார்ச் 17: குன்றத்தூர் ஒன்றியம் சோமங்கலம் ஊராட்சியில் சோமங்கலம், மேட்டூர், மேலாத்தூர் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த 3 மாதமாக இந்த ஊராட்சி முழுவதும் உள்ள தெருக்களில் மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்து வருவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது. குன்றத்தூர் ஒன்றியம் சோமங்கலம் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் 50க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 3 மாதங்களாக, மின்விளக்குகள் முறையாக பராமரிக்காததால், பெரும்பாலான தெருக்களில் மின் விளக்குகள் பழுதாகி எரிவதில்லை. இதனால் ஊராட்சி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதுபோல் பிரதான சாலையான மேட்டூர் சாலை, மேலாத்தூர் சாலை, ஏரிக்கரை, குளக்கரை சாலை ஆகிய சாலைகளில்  முழுவதுமாக மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் செல்லும் பெண்கள் கடும் அச்சத்துடன் உள்ளனர். இதுதொடர்பாக, சோமங்கலம் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சிய போக்காக உள்ளனர் என்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Somangalam ,
× RELATED சோமங்கலம் பகுதியில் நகை திருடிய 3 வாலிபர்கள் கைது