×

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீரை அகற்றக்கோரி மக்கள் சாலை மறியல்: அதிகாரிகளை கண்டித்து கோஷம்

மாதவரம்: சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 27வது வார்டு, பெரிய சேக்காடு, காமராஜர் சாலை குறுக்கு தெரு சாலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பாதாள சாக்கடை இல்லாததால் பொதுமக்கள் அனைவரும் கீழ்நிலை தொட்டியில் கழிவுநீரை தேக்கிவைத்து பின்னர் லாரிகள் மூலம் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இந்த தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கின்றவர்கள் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியை சரியாக பராமரிக்காதால் அதில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அடிக்கடி தெருவில் ஓடுவதால் பொதுமக்கள் நடந்துச்செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். குழந்தைகள் முதல் முதியவர் வரை தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து மாதவரம் மண்டல குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் இரவு குடியிருப்பில் இருந்து கழிவுநீர் வெளியேறி தெருவில் ஓடியதால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திரண்டு குடிநீர் வழங்கல்வாரிய அதிகாரிகளை கண்டித்து காமராஜ் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

இந்த நிலையில், நேற்று காலையும் கழிவுநீர் வெளியேறியதால் கடும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட குடியிருப்பு அருகே திரண்டு நின்று குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர். குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் வந்து மக்களை சமாதானப்படுத்தினர். அப்போது பொதுமக்கள், ‘’ இது5 வருட கால பிரச்னை. அதிகாரிகள் நிரந்தர தீர்வு எடுக்காமல் குடியிருப்புவாசிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். சுகாதார சீர்கேட்டை தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை’’ என்றனர். “இனி இதுபோல் கழிவுநீர் வெளியேவராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால் மறியல் கைவிடப்பட்டது.

Tags : Madhavaram ,Chennai Municipal Madhavaram Zone 27th Ward ,Great Chekkad ,Kamrajar Road Cross Street Road ,
× RELATED நெல்லையில் ஆவின் நீலநிற பால்...