நெல்லை: நெல்லை மாவட்டத்தில் முன்அறிவிப்பின்றி ஆவின் நீலநிற பால் பாக்கெட்டுகளின் விநியோகம் குறைக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆவின் பால் விநியோகத்தில் சிக்கல்கள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
நெல்லையில் நீலநிற ஆவின் பால் பாக்கெட்டுகளின் விநியோகம் திடீரென குறைக்கப்பட்டுள்ளதால், அதிகாலையில் ஆவின் விற்பனை நிலையங்களுக்கு பால் வாங்கச் சென்ற பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். எந்தவித முன்அறிவிப்பும் இன்றி விநியோகத்தில் மாற்றம் செய்யப்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தற்போது நீலநிற பால் பாக்கெட்டுகள் மாதாந்திர அட்டைத்தாரர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் தினசரி நேரடியாக பால் வாங்கும் நுகர்வோருக்கு பால் கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பெரும்பாலான விற்பனை முகவர்களிடமும் நீலநிற பால் பாக்கெட்டுகளின் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முறையான முன்அறிவிப்பின்றி விநியோகத்தில் மாற்றம் செய்யப்பட்டதால் பொதுமக்களும், விற்பனை முகவர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சாந்திநகரைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், “ஆவின் விற்பனை நிலையத்தில் நீலநிற பால் இல்லை என்று தெரிவித்தனர். டிலைட் பால் மட்டுமே இருப்பதாகக் கூறி அதையே வாங்குமாறு அறிவுறுத்தினர். ஆனால் டிலைட் பாலும் தேவையான அளவில் கிடைப்பதில்லை. 3 அல்லது 5 லிட்டர் கேட்டால், 1 லிட்டர் அல்லது அரை லிட்டர் மட்டுமே வழங்குகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக நீலநிற பால் கிடைப்பதில்லை. குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான இந்த பால் கிடைக்காததால் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
இதற்கிடையில், மதுரையில் ஆவின் நீலநிற பால் பாக்கெட்டுகளில் குளோரின் போன்ற மருந்து வாசம் வீசுவதாக பொதுமக்கள் உணவு பாதுகாப்புத் துறையில் புகார் அளித்துள்ளனர்.
மதுரை மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆவின் பாலில் மருந்து போன்ற வாசம் இருப்பதாக நுகர்வோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து, புகாருக்குள்ளான பால் மாதிரிகள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
ஆவின் பால் விநியோகக் குறைபாடு மற்றும் பால் தரம் குறித்த தொடர் புகார்கள் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், விரைவாக ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
