விழுப்புரம், ஜூலை 30: தவெக ஆட்சியில் பெண்கள், வெளியில் வரமுடியாமல் அச்சப்படுகிறார்கள். முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை என சி.வி.சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மற்றும் இபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர் பசுபதி அணியினரிடையே உட்கட்சி மோதல் அதிகரித்துள்ள நிலையில் சி.வி சண்முகம் பெண் நிர்வாகிகளை சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்பி மதிவாணனிடம் புகார் மனுவை நேற்று அளித்தார். பின்னர் அவர் கூறுகையில், சமீபகாலமாக குறிப்பிட்ட சில நபர்களால் பெண்களை குறிவைத்து, குடும்பபெண்கள், திருமணமானவர்கள், கல்லூரி பெண்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மானபங்கப்படுத்தி பொய்யான, அவதூறான செய்திகள் அச்சுறுத்துகிற வகையில், சமூகத்தில் அந்தஸ்து, குடும்ப வாழ்க்கையை கெடுக்கிற வகையில் தவறான, பொய்யான, கற்பனையாக செய்திகளையும் சமூகஊடகங்களில் ஏஐ பயன்படுத்தி, மார்பிங் செய்து புகைப்படங்கள் வெளியிட்டு அவதூறுபரப்பி வருகிறார்கள்.
இதனால் சம்மந்தப்பட்ட பெண்கள் மிகப்பெரிய மனஉளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. அரசியலில் எவ்வளவோ பிரச்னை, கருத்துவேறுபாடு, சண்டை, போராடியிருக்கிறோம். இதுவரை எந்தகட்சியிலும் குடும்ப பெண்களை தரம் தாழ்ந்து அவதூறாக வாழ்க்கையை கெடுக்கும் வகையில் செயல்பட்டது கிடையாது. முதல்முறையாக, புரட்சிதலைவரால் கட்டிகாத்த இயக்கம், ஜெயலலிதாவால் காப்பாற்றப்பட்ட அதிமுகவில் அவரை பின்பற்றி வந்த லட்சக்கணக்கான பெண்களுக்கு ஏற்பட்டிருக்கிற நிலையை தற்போது பார்த்திருக்கிறீர்கள். உங்கள் தலைமையின் கீழ், நேரடிபார்வையில் இயக்கத்தில் உழைத்த, உழைத்துகொண்டிருக்கிற பெண்களை தரக்குறைவாக மானபங்கம், அவமானபடுத்தி செய்திகளை பரப்புகின்றவர்களை ஊக்குவித்து கொண்டிருக்கிற இபிஎஸ் இது நியாயமா?. உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா? இது கட்சி நடத்துகிற லட்சணமா? ஜெயலலிதா இருந்திருந்தால் உங்கள் நிலைமை என்ன ஆயிருக்கும். அவதூறு செய்திகளை அனுப்புங்கள் என்று பார்த்து ரசித்து கொண்டிருக்கிறார்.
ஆனால் காவல்துறையும் இதனை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதுதான் எங்களுக்கு கவலையாக இருக்கிறது. முதலமைச்சர் என்ன சொல்கிறார். பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள். பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிங்கப்பெண் என்ற படையை உருவாக்கியிருக்கிறார். ஆனால் இங்கு விழுப்புரம் மாவட்டத்தில் என்ன நிலமை. பெண்கள் தைரியமாக பொதுவாழ்க்கைக்கு வரமுடியாது இனிமேல். யாரும் வரமுடியாது. அச்சப்படுகிறார்கள், பயப்படுகிறார்கள். இந்த நிலமை எங்கே முடியும் என்று தெரியவில்லை. ஆனால் கீழே இருக்கிற அலுவலர்கள் மாறவில்லை. காட்சி, ஆட்சி மாறியது, ஆனால் அதேபடம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் காவல்துறை தன்னை திருத்தி, மாற்றிகொள்ளவில்லை. இன்றைக்கு எஸ்பியிடம் கேட்கிறேன். பல காவல் நிலையங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து நாங்கள் என்ன செய்வோம் என்று பொறுத்திருந்து பாருங்கள், என்றார்.
முதல்வர் ஆட்சியில் இப்படி
ஒருகாவல்துறை அதிகாரிகளா?
சி.வி சண்முகம் கூறுகையில், நான் வழக்கறிஞர், சட்டஅமைச்சராகவும் இருந்துள்ளேன். எனக்கு எஸ்பி சொல்லிய பதில். உண்மையிலே முதல்வர் ஆட்சியில் இப்படி ஒரு எஸ்பியா, காவல்துறை தலைவரா?. அவர் சொல்கிறார். உங்களுக்கு சட்டம் தெரியும், 7 ஆண்டு தண்டனை வரை உள்ள குற்றவழக்குகளில் முதலில் சிஎஸ்ஆர் கொடுப்போம், பின்னர் விசாரணை நடத்தி அரசு வழக்கறிஞரிடம் கருத்துகேட்டு, அவர் சொன்னால் வழக்குபதிவு செய்வோம், கைது செய்வீர்களா என்று கேட்டால், ேதவைப்பட்டால் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்வோம் என்கிறார். அப்படியென்றால் 7 ஆண்டுகளுக்கு கீழ் உள்ள குற்ற வழக்குகளில் உள்ளவர்கள் காவல்துறை அறிவுறுத்தலின்படி யாரும் பயப்படதேவையில்லை. சுதந்திரமாக திரியலாம் என்று குற்றவாளிகளுக்கு உத்தரவாதம் கொடுத்திருக்கிறார். சிறப்பான எஸ்பியை நியமித்ததற்கு முதல்வருக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துகொள்கிறோம். இப்படிப்பட்ட பதிலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறைக்கு உரிய அறிவுரை வழங்கி நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.
