×

வாங்கிய கடனை திருப்பி தராததால் சமையல் மாஸ்டரை துப்பாக்கி முனையில் கடத்தி தாக்குதல்

 

சின்னசேலம், ஜூலை 30: கடன் தகராறில் சைனிஸ் சமையல் மாஸ்டரை துப்பாக்கி முனையில் கடத்தி தனி வீட்டில் அடைத்து வைத்து சரமாரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரம் மாவட்டம் கேசவதாசபுரம் பத்மினி நகரை சேர்ந்தவர் சியோன் சந்திரன்(39). இவர் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சில இடங்களில் சைனிஸ் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். மேலும் இவர் நன்றாக தமிழ்பேசி வந்தார். கடந்த மே, ஜூன் மாதங்களில் சேலம் ஆத்தூர் தாலுகா கெங்கவல்லி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சைனிஸ் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். அங்கு இவருக்கு சரியாக சம்பளம் தரவில்லை என தெரிகிறது. இதனால் கேரள வாலிபர் சியோன் சந்திரன், கோவையில் உள்ள ஓட்டலுக்கு சென்று வேலை செய்து வந்தார்.

அங்கு ஒரு அறை எடுத்து தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். கடந்த 25ம் தேதி இரவு 2.30 மணியளவில் அவருடைய அறைக்கு சென்ற 4 பேர் கும்பல், நாங்கள் போலீஸ், ஒரு வழக்கில் உன்னை விசாரிக்க வேண்டும் என்று கூறி காரில் அவரை கடத்தி சென்று கள்ளக்குறிச்சி சின்னசேலத்துக்கு வந்துள்ளனர். பின்னர் குரால் பகுதியில் உள்ள ஒரு தனி வீட்டில் அவரை அடைத்து வைத்து, சந்திரன் வாங்கிய ரூ.21,000 பணத்திற்காக வட்டியுடன் ரூ.2 லட்சம் தர வேண்டும் என்றும், எங்க கடையில் திருடிய பணம், செல்போன் ஆகியவற்றை தரவேண்டுமென்று கூறி துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் துப்பாக்கி கட்டையாலும், பெல்ட்டாலும் தாக்கி உள்ளனர். அப்போது வலி தாங்காமல் கத்திய சந்திரனை வாயில் துணி வைத்து அடைத்து கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டி உள்ளனர்.

இதுகுறித்து ரகசிய தகவல் அறிந்த கீழ்குப்பம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் அங்கு சென்று அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கிருந்த கெங்கவல்லியை சேர்ந்த வினோத்குமார்(28), அங்கமுத்து(25), மகேந்திரன்(27) ஆகிய 3 பேரை பிடித்து கைது செய்து, அவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கி, பெல்ட், துப்பாக்கி பால்ரஸ் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் வினோத்குமார் கெங்கவல்லியில் ஓட்டல் நடத்தியபோது, அங்கு சியோன் சந்திரன் சைனீஸ் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்ததும், அவர் வினோத்குமாரிடம் பணம் கடன் வாங்கியதாகவும், அதனை திருப்பி தராததால் இந்த கடத்தல் சம்பவம் நடந்ததாக தெரியவந்தது.

Tags : Chinnasalem ,Thiruvananthapuram… ,
× RELATED டிரேடிங்கில் முதலீடு செய்வதாக கூறி...