×

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு மீதான வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி

கொளத்தூர்: கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்துள்ளதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது வேட்புமனுவில், திமுக அறக்கட்டளையின் நிர்வாகியாக இருப்பதையும், அந்த அறக்கட்டளைக்கு ரூ. 2.27 கோடிக்கு நிலம் வாங்கியதையும் மறைத்துவிட்டதாகக் கூறி, அது குறித்து விசாரணை நடத்தத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் சிவஞானசம்பந்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வேட்புமனுவில் அறக்கட்டளை சொத்து விவரங்களை மறைத்தது குற்றம் என்றும், இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. தேர்தல் ஆணையம் தரப்பில், இது தொடர்பாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மட்டுமே தனிநபர் புகார் தாக்கல் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைக் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, வேட்புமனுவில் தனிப்பட்ட சொத்து விவரங்கள் மட்டுமே தெரிவிக்கப்பட வேண்டும்; அறக்கட்டளை சொத்துகள் தனிப்பட்ட சொத்துகள் ஆகாது. மேலும், தனிப்பட்ட முறையில் இந்த சொத்துகளில் சம்பந்தம் இருக்கிறது என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்பதால் நோட்டீஸ் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்தது. நீதிமன்றத்தின் இந்தக் கருத்துகளைத் தொடர்ந்து, மனுதாரர் சிவஞானசம்பந்தம் தான் தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். அதன்பேரில், வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags : Kolathur ,Mu. ,Stalin ,Supreme Court ,Chief Executive Officer ,K. ,CHENNAI HIGH COURT ,CLAIMING ,Dimuka ,President ,Mu. K. Stalin ,
× RELATED ஐசிசி ஒருநாள் போட்டியின்...