×

ஒரு மீட்டர் இடைவெளியில் வாக்காளர் வரிசை வாக்குச்சாவடிகளில் கொரோனா தடுக்க 10 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

வேலூர், மார்ச் 17: சட்டமன்ற தேர்தலில் வாக்கு அளிக்க வரும் வாக்காளர்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க, வாக்குச்சாவடிகளுக்கு 10 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்யும் பணி தொடங்கி உள்ளதாக சுகதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில், கொரோனா பரவல் அச்சம் காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற வீதம் வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர தற்போது கொரோனா பரவல் மீண்டும் பரவ தொடங்கி உள்ளதால் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் கடுமையாக மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் கொரோனா நோயாளிகள் வாக்களிக்க வசதியாக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக பாதிப்பு மற்றும் அறிகுறி உள்ளவர்கள் தபால் ஓட்டுகள் பெற்று வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு உள்ள நிலையில் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதோடு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 10 வகையான உபகரணங்களை வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கொரோனா பரவல் காரணமாக வாக்குச்சாவடிகளில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். ஒரு மீட்டருக்கு ஒரு வாக்காளர் என வரிசை நிற்க வைக்கப்படும். அதுதவிர வாக்குச்சாவடியில் 10 வகையான உபகரணங்களை கையாள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு வாக்காளர்களின் உடல் வெப்பநிலையை சோதனையிட வெப்பமானி, முகக்கவசம், ஒவ்வொருவருக்கும் தனி கையுறை கொடுக்கப்படும். கையுறை போட்டு கொண்டு தான் வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு சென்று வாக்களிக்க வேண்டும். இருவகையான சானிடைசர், கையுறைகளை போடுவதற்காக பிளாஸ்டிக் பைகள், பாதுகாப்பு கவச உடை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு பேஸ் ஷீல்ட் போன்ற 10 வகையான பொருட்கள் கட்டாயம் வாக்குச்சாவடிகளில் இருக்கும். ஒவ்வொரு மாவட்டத்திற்கு எவ்வளவு வாக்குச்சாவடி உள்ளது? என தொகுதி வாரியாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்யும் பணி தொடங்கி உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான பொருட்கள் அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்படும்.

Tags :
× RELATED நோட்டீஸ் கொடுக்க வந்த மாநகராட்சி...