×

பாறைமேடு பகுதியில் 2 கொம்பன் ஒற்றை யானைகள் உலா

வால்பாறை : வால்பாறை அருகே பாறைமேடு பகுதியில் 2 கொம்பன் ஒற்றை யானைகள் வலம் வருவது பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் வனப்பகுதிகளில் புதிய புற்கள் மற்றும் மரங்களின் இளம் இலைகள் அதிகளவில் முளைத்துள்ளன.

அவற்றை மேய்ந்து வரும் இந்த இரண்டு கொம்பன் யானைகள், சாலையோர வனப்பகுதிகளிலும் அவ்வப்போது தென்பட்டு வருகின்றன. இதனால், அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பான இடங்களில் வாகனங்களை நிறுத்தி, தொலைவில் இருந்து யானைகளை ரசித்துவிட்டு செல்கின்றனர்.

இதற்கிடையே, வால்பாறையின் பாறைமேடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலும் யானைகளின் நடமாட்டம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உணவு மற்றும் தண்ணீரைத்தேடி யானைகள் சாலைகளை கடப்பதுடன், தேயிலை தோட்டங்களை ஒட்டிய பகுதிகளிலும் அவ்வப்போது காணப்படுகின்றன. எனவே, வால்பாறை மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

யானைகளுக்கு அருகில் செல்லவோ, புகைப்படம் எடுப்பதற்காக கூட்டம் கூடவோ கூடாது. யானைகள் தென்படும் இடங்களில் வாகனங்களை மெதுவாக இயக்கி, பாதுகாப்பான இடைவெளியை கடைபிடித்து, வனத்துறையினரின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags : Paraimedu ,Valparai ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து