×

அதிகரட்டி பேரூராட்சியில் மின் மயானத்துக்கு விரைந்து நிதி ஒதுக்க வலியுறுத்தல்

 

ஊட்டி, ஜூலை 28: குன்னூர் வட்டத்திற்கு உட்பட்ட அதிகரட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மின் மயானம் அமைக்க விரைந்து நிதி ஒதுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. சிபிஎம் அதிகரட்டி கிளை நிர்வாகி ஆல்துரை, தமிழக அரசிற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டம், அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட குன்னக்கொம்பை முதல் அதிகரட்டி இடையிலான சாலை ஓரம் சர்வே எண் 779-ல் மின் மயானம் அமைக்க கோரி ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் அதிகரட்டி பேரூராட்சி மன்ற கூட்டத்தில் மின் மயானம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இம்மின் மயானம் அமைக்கப்பட்டால் சுற்று வட்டார பகுதிகளான அதிகரட்டி, உலிக்கல், கேத்தி ஆகிய பேரூராட்சிகள், இத்தலார், பாலகொலா, மேலூர், உபதலை ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மையமாக உள்ள இடமாகும்.

இதனால் இங்கு மின் மயானம் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பொதுமக்களுடன் இணைந்து அரசின் கவனம் ஈர்க்கும் வகையில் போராட்டங்களையும் நடத்தி வருகிறோம். தற்போது உள்ள சூழ்நிலையில் மின் மயானம் அமைப்பது என்பது சுற்றுசூழல் உள்ளிட்ட காரணங்கள் மற்றும் அனைவரும் பயன்படுத்த கூடியது என்ற அடிப்படையில் மிகவும் அவசியமான ஒன்றாகும். இடம் மற்றும் பேரூராட்சியின் தீர்மானம் என அனைத்தும் இருந்தும் அதற்கான நிதி என்பது தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்யாததால் கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்படி மின் மயான பணிகள் துவங்கப்படாமல் உள்ளது.

எனவே இப்பிரச்னையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மலை மாவட்டமான நீலகிரியில் மக்களின் மிக முக்கியமான கோரிக்கை என்ற அடிப்படையில் மின் மயானம் அமைத்திட தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

 

Tags : Adhikaratti Town Panchayat ,Communist Party of India ,Marxist ,Coonoor taluk ,CPM ,Adhikaratti ,Aldurai ,Tamil Nadu government ,
× RELATED நீலகிரி கலை மற்றும் அறிவியல்...