×

பூசாரிகளின் வாழ்வில் புத்துணர்வை ஏற்படுத்திய தேர்தல் அறிக்கை கோயில் பூசாரிகள் நலச்சங்கம் திமுக கூட்டணிக்கு ஆதரவு

மன்னார்குடி, மார்ச் 16: தமிழ்நாடு கோயில் பூசாரிகள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் வாசு வெளியிட்டுள்ள அறிக்கை: கிராம கோயில் பூசாரிகளுக்கு மாத ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயில் இருந்து 4 ஆயிரமாக உயர்த்தப்படும். கோயில் பூசாரிகள் மாத ஊதியம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சமூக நீதியை நிலை நாட்டும் வகையில் பயிற்சி பெற்ற 225 மாணவர்களும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களின் சொத்துகளையும் கண்காணித்து பாதுகாக்க 25 ஆயிரம் இளைஞர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள். பத்ரிநாத், கேதார்நாத், ரிஷிகேஷ் போன்ற வடநாட்டு திருத்தலங்களுக்கு சென்றுவரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.25 ஆயிரம், ஒரு லட்சம் பேருக்கு வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க வாக்குறுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளதை தமிழ்நாடு கோயில் பூசாரிகள் நலச்சங்கம் நன்றி உணர்வோடு வரவேற்கிறது.

தமிழக சட்டப் பேரவைக்கு இதுவரை 15 முறை தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. பல்வேறு கட்சிகளும் அவ்வப்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் பூசாரிகளுக்கு பெயரளவில்தான் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், தற்போது திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கோயில் பூசாரிகள் நலச்சங்கத்தின் கோரிக்கைகளை ஏற்று பல்வேறு நலத்திட்டங்களை ஆட்சிப் பொறுப்பேற்றதும் அமல்படுத்துவோம் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது பூசாரிகளின் வாழ்வில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேல் எடுத்து வலம் வருவோர் மத்தியில் தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் வெற்றி வேலை கையிலே வாங்கிய மு.க.ஸ்டாலின் கையில் செங்கோலும் ஏந்தி அரியணை ஏறும் நேரம் நெருங்கிவிட்டது. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து அரும்பெரும் திட்டங்களை செயல்படுத்துவீர்கள் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடமும் பூசாரிகளிடமும் ஓங்கி ஒலித்து வருகிறது. தற்போது திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கிராம கோயில் பூசாரிகள் நலனில் மிகவும் அக்கறைகொண்டு மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள திட்டங்கள் மிகுந்த வரவேற்புக்கு உரியவை. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆட்சிக்கட்டிலில் ஏற்ற தமிழகம் முழுவதும் உள்ள பூசாரிகள் அனைவரும் உறுதி ஏற்றுள்ளோம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : DMK ,Temple Priests Union ,
× RELATED திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்