×

மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் விவகாரம்; தமிழக தலைமை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

 

புதுடெல்லி: மனித கழிவுகளை மனிதர்களே அள்ளக் கூடாது என்பது உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கி இருக்கக்கூடிய மிக முக்கியமான உத்தரவு ஆகும். கழிவுகளை அகற்றும் வேலைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட ஏராளமான வழிகாட்டி நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நுழைவாயில்களின் அருகே உள்ள பாதாள சாக்கடையை பணியாளர் ஒருவர் இறங்கி சுத்தம் செய்திருக்கிறார்.

இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு இருந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,” டெல்லி அரசின் பொதுப்பணித்துறைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பித்திருந்தது. இருப்பினும் மனித கழிவுகளை மனிதனே அல்லும் விவகாரத்தில் முன்னதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மாநில அரசுகள் சரிவர பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் வி.எம்.பஞ்சோலி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்,” மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் முன்னதாக தெளிவாகக் கூறியிருந்தும், இப்போதும் ஏன் உயிரிழப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

மனிதக் கழிவுகளை அள்ளவும், கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதனைப் பயன்படுத்தக் கூடாது என்று 2023 உத்தரவிட்ட பின்னரும், கடந்ந 2024ம் ஆண்டு முதல் 2025 வரையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் எப்படு உயிரிழந்தனர். குறிப்பாக இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களை நாங்கள் நேரில் வரவழைக்க நேரிடும்.

இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். குறிப்பாக முந்தைய உத்தரவுகளை முறையாக செயல்படுத்தாத தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற கேள்வியெழுகிறது என்று கடும் எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், இந்த விவகாரம்
தொடர்பாக ஒரு வாரத்தில் மேற்கண்ட நான்கு மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags : Tamil Nadu ,Chief Secretary ,Supreme Court ,New Delhi ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...