கிருஷ்ணகிரி, ஜூலை 27: தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது கற்றல், கற்பித்தல் திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. அதன்படி, மாணவர்களின் மொழிப்பாடங்கள் மற்றும் கணித செயல்பாடுகளில் அடிப்படைத் திறனை உறுதி செய்திடும் பொருட்டு கடந்த 2023-2024ம் கல்வியாண்டில் `இணைப்புப் பயிற்சியும்’, கடந்த 2024-2025ம் கல்வியாண்டில் கற்றல் முனைப்புள்ளவர்கள் திட்டமும் அமல்படுத்தப்பட்டன. தொடர்ந்து கடந்த 2025-2026ம் கல்வியாண்டில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6, 7, 8 மற்றும் 9ம் வகுப்புகளில் பயின்ற மாணவர்களுக்கு, அடிப்படைக் கற்றலில் திறன் அடைவு பெறுவதற்குதிறன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, நடப்பு 2026-2027ம் கல்வியாண்டில், 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அடிப்படைக் கற்றல் விளைவுகளுடன், அனைத்துக் கற்றல் விளைவுகளையும் உறுதிப்படுத்தும் வகையில், கற்றல் கற்பித்தல் வழிகாட்டுதல் குழு அமைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கற்றல், கற்பித்தல் வழிகாட்டுதல் குழு அமைக்க 6 முதல் 10ம் வகுப்பு வரை தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 11, 12 வகுப்புகளுக்குத் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் தன்னார்வத்துடன் பங்கேற்க விருப்பமுள்ளவர்களின் பட்டியலைத் தயாரிக்க வேண்டும என சிஇஓக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இக்குழு மூலம் திறன் குறைவான மாணவர்களுக்கு, முதல் பருவத்திற்குள் அடிப்படை கற்றல் அடைவு பெற வழி செய்ய ேவண்டும்.
ஒருங்கிணைப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட மாவட்ட மற்றும் வட்டார வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் அடிப்படை விவரங்கள் பெற வேண்டும். அனைத்து விதமான போட்டித் தேர்வுகளையும் மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையிலும், மாணவர்களின் பங்கேற்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் வகையிலும் ஐந்தாண்டுத் திட்டம் தயாரித்தல் மற்றும் கல்வியாண்டு செயல்பாடுகளை மாதவாரியாக திட்டமிடுதல் வேண்டும். மாணவர்களுக்கு அனைத்துக் கற்றல் விளைவுகளும் சென்றடைய, மாவட்ட கற்றல் கற்பித்தல் வழிகாட்டுதல் குழுவில் உள்ள திறமையான, 6 முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தின் தொடர்ச்சியை நன்கு அறிந்த ஓர் ஆசிரியரை முதன்மைக் கருத்தாளராகக் கொண்டு, உயர்நிலை அளவில் 5 பாடங்களையும், மேல்நிலை அளவில் 12 பாடங்களையும் கருத்துப் பரிமாற்றம் செய்து வலுவூட்ட ஒருங்கிணைப்புப் பணி மேற்கொள்ள வேண்டும்.
மாதத் தேர்வு, காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் போது மாணவர்கள் தானாக நன்முறையில் தேர்வெழுதித் தேர்ச்சி பெற ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாதத்தின் இறுதி வாரத்தில் மாநில அளவில், மாவட்ட அளவில் நடைபெற்ற செயல்பாடுகளை பகுப்பாய்வு செய்து, ஒப்பிட்டு அறிக்கையைத் தயாரிக்க வேண்டும். இக்குழுவானது பொதுத்தேர்வின் தேர்ச்சி விழுக்காட்டை மட்டும் இலக்காக கொள்ளாமல், சராசரி மதிப்பெண்களை உயர்த்துவதை இன்றியமையாத நோக்கமாகக்கொண்டு செயல்பட ஊக்குவிக்க வேண்டும்.
நீட், ஜேஇஇ, கியூட், கிளாட், என்எம்எம்எஸ், டிரஸ்ட், என்டிஎஸ்இ போன்ற திறனாய்வு, உதவித்தொகைத் தேர்வுகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வினை இக்குழு மூலம் அனைத்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும். இந்த அனைத்துச் செயல்பாடுகளிலும் மாநில, மாவட்ட, வட்டாரக் குழுக்கள் முன்னின்று ஒருங்கிணைத்திடவும், கற்றல் கற்பித்தல் வழிகாட்டுதல் குழுவின் செயல்பாடுகள் படிப்படியாக முன்னேற்றம் பெறவும், மாவட்ட, வட்டார பாட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் அவரவர் பள்ளிலிருந்தே பணிபுரிந்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
