×

கோவை கோனியம்மன் கோயிலில் உண்டியல் பணம் திருட்டு 3 அதிகாரிகள், 4 பணியாளர்கள் சஸ்பெண்ட்: உதவி ஆணையருக்கு நோட்டீஸ்

கோவை: கோவை கோனியம்மன் கோயிலில் உண்டியல் பணத்தை திருடிய விவகாரத்தில் கோயில் பணியாளர்கள் 4 பேர், அதிகாரிகள் 3 பேரை சஸ்பெண்ட் செய்து அறநிலையத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். கோவை பெரிய கடை வீதியில் உள்ள கோனியம்மன் கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த கோயிலில், கடந்த 15ம் தேதி உண்டியல் திறப்பு நடைபெற்றது.

அப்போது, கோயிலில் உதவி ஆணையர் நேரடி மேற்பார்வையில் நிரந்தர உண்டியல்கள் 9 திறக்கப்பட்டு அதில் தங்கம், வெள்ளி, ரொக்கப்பணம் ஆகியவை எண்ணப்பட்டன. மற்ற 6 தற்காலிக உண்டியல்கள் (திருவிழா கால உண்டியல்) செயல் அலுவலர், ஆய்வாளர், கோயில் பூசாரி மற்றும் பணியாளர்கள் முன்பாக சீல் உடைக்கப்பட்டு திறக்கப்பட்டது.  இந்நிலையில், இதில் ஒரு உண்டியலில் இருந்த காணிக்கையை மொத்தமாக கோயில் பணியாளர்கள் திருடியதாக பக்தர்கள் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ், கோனியம்மன் கோயிலில் விசாரணை நடத்தினார். புகாரின்படி உக்கடம் போலீசார் கோயில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அதிகாரிகள் சென்ற பின்னர் ஒரு உண்டியலில் உள்ள பணத்தை ஊழியர்கள் திருடி உள்ளனர். அதில் ரூ.31 ஆயிரம் இருந்துள்ளது.

இந்த பணத்தை திருடிய சீட்டு விற்பனையாளர் பீளமேடு பாலசுப்பிரமணியன்(52), அலுவலக உதவியாளரான பேரூர் சரவணன்(34), கோயில் திருவலகு ரத்தினபுரி பிரதீப்குமார்(31), கோட்டை மேடு பூசாரி கிருஷ்ணராஜ்(56) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கைதான 4 பேர் மற்றும் உண்டியல் திருட்டை கண்காணிக்க தவறிய கோயில் செயல்அலுவலர் குமார், சரக ஆய்வாளர்கள் ராம்குமார், உதயகுமார் என 7 பேரை சஸ்பெண்ட் செய்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். உதவி ஆணையர் உஷா நந்தினிக்கு விளக்கம் கேட்டு அமைச்சர் ரமேஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Tags : Coimbatore Koniamman Temple ,Coimbatore ,Minister ,Endowments ,Charities ,Koniamman Temple ,Periya Kadai Street ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து