×

பக்தர்கள் காணிக்கை திருட்டு விவகாரம் அயோத்தி ராமர் கோயிலில் நடந்த 10 நாள் பரிகார சடங்கு நிறைவு

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டை தொடர்ந்து நடத்தப்பட்ட 10 நாள் பரிகார சடங்கு நேற்றுடன் நிறைவடைந்தது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நன்கொடை பணம் திருட்டு, ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் நிதி நிர்வாகத்தில் குளறுபடி நடப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் அரசியல் களத்தில் பெரும் புயலை எழுப்பி உள்ளது.

இந்த சூழலில் ராமர் கோயிலின் புனிதத்தை மீட்டெடுக்கவும், கடவுளுக்காக பக்தர்கள் செலுத்திய காணிக்கை திருடப்பட்டதால் ராமரிடம் மன்னிப்பு கேட்கவும் 10 நாள் புனித சடங்கு நடத்தப்பட்டது. கடந்த 15ம் தேதி தொடங்கிய புனித சடங்கு நேற்றுடன் நிறைவடைந்தது. இதுகுறித்து ராமர் கோயில் அறங்காவலர் மஹந்த் தினேந்திர தாஸ் கூறுகையில், “வேத அறிஞர்களின் வழிகாட்டுதலின்கீழ், கோயிலின் புனிதத்தை மீட்டெடுக்க யாக சாலையில் நடத்தப்பட்ட ஹவன் மற்றும் சிறப்பு வழிபாடுகளுடன் இறுதி பூர்ணாஹூதி நிகழ்வு நடைபெற்றது.

அயோத்தி மற்றும் பிற இடங்களை சேர்ந்த சுமார் 70 வேத ஆச்சாரியர்கள் 10 நாள் புனித சடங்கில் பங்கேற்று, வேத பாராயணம், ஹவன், ருத்ராபிஷேகம் மற்றும் ராமார்ச்சன வழிபாடு ஆகியவற்றை மேற்கொண்டனர். மேலும், கோயிலின் தலைமை பூசாரி 10 நாள் முழுவதும் விஷ்ணு சகஸ்ரநாமத்தை ஓதினார்” என்றார்.

* முன்னாள் பொது செயலாளரின் கையெழுத்து அடையாள அட்டைக்கு அனுமதி
ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் நிதி நிர்வாக முறைகேடு விவகாரத்தில் அறக்கட்டளை பொது செயலாளர் சம்பத் ராய் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் பொது செயலாளர் பதவியில் இருந்து விலகியதால், அவரது கையெழுத்திட்ட அடையாள அட்டைகள், நுழைவு அனுமதிகள் செல்லாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் ராமர் கோயிலில் தற்போது நடந்து வரும் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து முன்னாள் பொது செயலார் சம்பத் ராயின் கையெழுத்திட்ட அடையாள அட்டைகள் மற்றும் நுழைவு அனுமதிகளுக்கு இடைக்கால ஏற்பாட்டின்கீழ் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags : atonement ceremony ,Ayodhya Ram temple ,Ayodhya ,-day atonement ceremony ,Ram temple ,Ayodhya, Uttar Pradesh ,Shri Ram Janmabhoomi Teerth Kshetra Trust… ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...