×

நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானி நியமனம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக தலைமை செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ள அரசாணை: மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அந்த பொறுப்பில் கஜலட்சுமி இருந்தார். நில நிர்வாக ஆணையர் பதவி தலைமைச் செயலாளர் பதவிக்கு இணையான அதிகாரமும் அந்தஸ்தும் கொண்டதாக கருதப்படுகிறது.

1992ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பிரிவைச் சேர்ந்த ராஜேஷ் லக்கானி, கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு பணியில் இருந்து ஒன்றியஅரசு பணிக்கு மாற்றப்பட்டார். அப்போது ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவோதயா வித்யாலயா சமிதியின் ஆணையராக பணியாற்றி வந்தார். அண்மையில் மீண்டும் தமிழக அரசுப் பணிக்கு திரும்பிய அவருக்கு தற்போது நில நிர்வாக ஆணையர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நிர்வாகத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட ராஜேஷ் லக்கானி, இதற்கு முன்பு தமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியாகவும், தமிழ்நாடு மின்வாரிய தலைவராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராகவும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளராகவும் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

அவரது நிர்வாக அனுபவத்தை கருத்தில் கொண்டு இந்த முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவஞானம் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இயற்கை பேரிடர்கள், அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கும் முக்கிய துறையின் தலைவராக அவர் செயல்பட உள்ளார்.

Tags : Rajesh Lakhani ,Administration ,Tamil Nadu ,Chennai ,Chief Secretary ,Saikumar ,Land Administration Commissioner ,Kajalakshmi ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து