×

நாமகிரிப்பேட்டை அருகே மாணவிக்கு கொரோனா உறுதியானதால் பள்ளி மூடல் ஆசிரியர் உள்பட 200 பேருக்கு பரிசோதனை

நாமகிரிப்பேட்டை, மார்ச் 16: நாமகிரிப்பேட்டை அருகே, அரசு பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் 200 பேருக்கு சுகாதார துறையினர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளியில் உள்ள 15வயது மாணவி, தேவஸ்தானம் புதூர் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு மாணவிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இவர் கடந்த 12ம் தேதி நாமகிரிப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது மாணவிக்கு சிகிச்சையுடன், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று பரிசோதனை முடிவில், மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் மாணவியை தேடிச்சென்றனர். அவர் பள்ளியில் இருப்பதாக தகவல் தெரியவந்தது. உடனடியாக பள்ளிக்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள், மாணவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

மேலும், சீராப்பள்ளி பேரூராட்சி சார்பில் பள்ளியின் வகுப்பறை மற்றும் வளாகம் முழுதுமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட 200 பேருக்கு மருத்துவ குழுவினர் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். பள்ளியை மூடிய அதிகாரிகள், அனைவரையும் வீட்டுக்கு செல்லும் படியும், முடிவுகள் வெளியாகும் வரை தனிமையில் தங்கும்படி அறிவுரை வழங்கினர். மாணவிக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பதும், அவரது வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா எனவும் பரிசோதனை செய்ய உள்ளனர். நாளை (இன்று) பள்ளியில் பயிலும் விடுபட்ட மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Namagiripettai ,
× RELATED நாமகிரிப்பேட்டையில் 20 லட்சம்...