×

நீட் தேர்வுக்கு எதிராக பேசும் முதல்வரும் மாணவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும்: பொது பள்ளிகளுக்கான மாநில மேடை பொது செயலாளர் பேட்டி

சென்னை: பொதுக் கல்வியை நாசப்படுத்தும் விக்சித் பாரத் சிக்‌ஷா அதிர்ஷ்டான் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் தமிழர் விடுதலை கழகம் சார்பில் அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், பொது பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுசெயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது, ஒன்றிய அரசுக்கு எதிராகவும் தமிழ்நாட்டில் போராடும் மாணவர்களை கைது செய்யும் தமிழக அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். விசிக, இந்திய கம்யூ., மார்க்சிய கம்யூ, எஸ்டிபிஐ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சியினர் மற்றும் அமைப்பினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின்னர் பொது பள்ளிகளுக்கான மாநில மேடை பொது செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளில் எந்த நோக்கத்திற்காக நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதோ அந்த நோக்கம் தோல்வி அடைந்து விட்டது. தனியார் கல்லூரிகளில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பணம் கொடுத்து சேர்கின்றனர். அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மீண்டும் மீண்டும் தேர்வு எழுதுகின்றனர். ஒன்றிய அரசு நீட் தேர்வை ரத்து செய்து மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இடங்களை வழங்கும் நடைமுறையை மாநில அரசுகளே பின்பற்ற வேண்டும். டெல்லியில் காவலர்கள் மாணவர்களை தாக்கியது போல் தமிழ்நாட்டில் மாணவர்களை தாக்குவதற்கு அனுமதிக்க கூடாது.

தமிழ்நாடு முதலமைச்சரும் நீட்டுக்கு எதிராக பேசுகிறார் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது அவரும் மாணவர்களுடன் இணைந்து போராடி இருக்க வேண்டும். போராடாமல் காவல்துறையை வைத்து மாணவர்களை தாக்குவது நியாயம் இல்லை. எந்தெந்த வகையில் நீட்டை ஒழிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்க முடியுமோ, அந்த நடவடிக்கைகளை எதிர்த்து நீட்டை ஒழிக்க முன்வர வேண்டும். தேவைப்பட்டால் மக்களோடு இறங்கி போராட முன் வர வேண்டும். இவ்வாறு கூறினார்.

Tags : Chief Minister ,NEET ,General Secretary ,State Platform for Public Schools ,Chennai ,Ambattur ,Tamil Liberation Organization ,Union government ,Delhi ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து