×

கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் விசாரணை கைதி அடித்து கொலை: சக கைதி மீது வழக்குப்பதிவு

சென்னை: கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இச் சம்பவம் பரபரப்பையும், கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் சக கைதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில், மனநலம் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த காப்பகத்தில் குற்றவியல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கிரிமினல் வார்டில் தங்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கிரிமினல் வார்டில் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி ஆழியார் காவல் நிலையம் சார்பில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாஹிர் (27) என்ற வாலிபர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதேபோல், தென்காசி மாவட்டம் அருணாச்சலப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த அரவிந்தசாமி (19) என்பவரும், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஜாஹிர் தங்கி இருந்த அதே கிரிமினல் வாடில் அரவிந்தசாமியும் அனுமதிக்கப்பட்டார். இவர்களுடன், 10க்கும் மேற்பட்டோர் அந்த வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 20ம் தேதி காலை 10.30 மணியளவில் கிரிமினல் வார்டில் இருந்து கழிவறைக்கு செல்வதில் அரவிந்தசாமி, ஜாஹிர் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில், அரவிந்தசாமி கடுமையாக தாக்கியதில் ஜாஹிருக்கு கண், தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு, அலறி கூச்சலிட்டுள்ளார். உடனே, பணியில் இருந்த மருத்துவமனை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஜாஹிரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.

அங்கு ஜாஹிருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் டாக்டர் சுமித்ரா, தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் அரவிந்த சாமி மீது புகார் அளித்தார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் மருத்துவர்களிடம் மேல் நடவடிக்கை குறித்து விசாரித்துள்ளனர். இந்நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜாஹிர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய தலைமைச் செயலக குடியிருப்பு போலீசார், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அரவிந்தசாமி மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.  உயிரிழந்த ஜாஹிர், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் பகுதியில் சாலையில் சென்ற நபரை அடித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்.

அவரது வீட்டு முகவரி எதுவும் இதுவரை தெளிவாக இல்லாததால் உயிரிழந்த ஜாஹிர் குறித்து தலைமைச் செயலக காலனி போலீசார் ஆழியார் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்து, ஜாஹிர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் சமீபத்தில் நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளி வியாபாரி சபரிவர்மன் சிறையில் காவலர்கள் மற்றும் கைதிகள் தாக்கியதில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, 2 நாட்களுக்கு முன் தூத்துக்குடி சிறையில் அருணாச்சலம் என்ற இளைஞர் போலீசார் தாக்குதலில் மயங்கி விழுந்து பலியானார். தற்போது, சென்னையில் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விசாரணை கைதி அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இது, பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Kilpauk Mental Hospital ,Chennai ,
× RELATED தமிழ்நாடு, புதுவையில் அமைச்சர் அமித்ஷாவின் 2 நாள் பயணம் திடீர் ரத்து