- முதல்வர்
- விஜய்
- கர்நாடக
- மெக்கேதாடு
- அணை
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மேக்கேதாடு அணை
- காவிரி
- கர்நாடகா அரசு
சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக முதல்வர் விஜய் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகா செல்கிறார். அப்போது, காவிரி பிரச்னை குறித்தும் விவாதிக்கப்படுகிறது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே வருகிற ஆகஸ்டு 3ம் தேதி முதல்வர் விஜய் கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமாரை சந்தித்து பேச உள்ளதாக தமிழக வேளாண் துறை அமைச்சர் வினோத் கூறியுள்ளார்.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைச்சர் வினோத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் நீராதாரம் மற்றும் காவிரி நதிநீர் உரிமைகள் தொடர்பான விவகாரத்தில் அரசு மிகவும் உறுதியாக இருக்கிறது. மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. அது தமிழகத்தின் மறுக்க முடியாத உரிமை. தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் மாநில எல்லை பிரச்னைகள் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்கவும், ஆலோசனைகளை மேற்கொள்ளவும் தமிழக முதல்வர் விஜய் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகா செல்ல உள்ளார்.
அங்கு நடைபெறவுள்ள முக்கிய ஆலோசனை கூட்டத்தில் அவர் நேரடியாக பங்கேற்று, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை சந்தித்து பேசுகிறார். இக்கூட்டம், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் விநியோகம் மற்றும் விவசாயிகள் சந்தித்து வரும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு சேர வேண்டிய உரிய பங்கை உடனடியாகத் திறக்க வேண்டும் என கர்நாடக அரசிடம் இக்கூட்டத்தின் போது வலியுறுத்தப்படும்.
மேகதாது அணையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம், அது நமது உரிமை. முதல்வர் விஜய் கர்நாடகா செல்லும் போது காவிரியில் நீர் திறக்கவும் வலியுறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். கர்நாடக அரசு மேகதாது பகுதியில் புதிய அணையை கட்டும் முயற்சியை மேற்கொண்டு வரும் சூழலில், அதற்கு தமிழகத்தில் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் கடைமடை பகுதிகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நீர் இதனால் பாதிக்கப்படும் என்ற அச்சம் உள்ளதால், எந்த சூழலிலும் மேகதாது அணை கட்டுமானத்தை அனுமதிக்க முடியாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெறும் கூட்டத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழக்கமாக பெறப்பட வேண்டிய காவிரி நீரின் அளவை தங்குதடையின்றி வழங்கிட கர்நாடக அரசிற்கு முதல்வர் தரப்பில் பலமான அழுத்தம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
