×

நாகர்கோவில் சிறையில் நடந்த கொலை வழக்கு; ஜாமீனில் விடுவித்த சபரிவர்மனை மீண்டும் அழைத்து வந்தது ஏன்?.. கைது செய்த போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை

 

நாகர்கோவில்: நாகர்கோவிலில் சிறை வியாபாரி கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடங்கிஉள்ள நிலையில், அவரை கைது செய்த தென்தாமரைக்குளம் போலீசாரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். சுசீந்திரம் அருகே ஈத்தங்காடு பகுதியை சேர்ந்த மாற்றுதிறனாளி சபரிவர்மன் (34) என்பவர், தனது கடையில் புகையிலை பொருட்கள் விற்றதாக தென்தாமரைகுளம் போலீசார் கைது செய்து, நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். சிறையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நேசமணிநகர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சிறை வார்டன் ெஜகன், தலைமை வார்டன் சுரேஷ், சிறை காவலர் சிவக்குமார் மற்றும் 8 கைதிகள் என 11 பேரை கைது செய்தனர்.

இந்த கொலை வழக்கில் சேர்க்கப்பட்ட நாகர்கோவில் சிறையில் இருந்த 8 கைதிகளும் கடந்த சில நாட்களுக்கு முன், பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். இந்த கொலை வழக்கு, நேசமணிநகர் காவல் நிலையத்தில் இருந்து தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரியாக நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி ராஜ்குமார் நவராஜ் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, நேற்று டிஎஸ்பி ராஜ்குமார் நவராஜ் தலைமையில் சிபிசிஐடி போலீசார் நேசமணிநகர் காவல் நிலையத்தில், சபரிவர்மன் கொலை வழக்கில் சேகரித்த முதற்கட்ட ஆவணங்கள், வாக்குமூல பதிவுகள், தடயங்களை கேட்டு பெற்றனர். மேலும், 3 குழுக்களாக பிரிந்து சபரிவர்மன் வீட்டில் அவரது மனைவி மற்றும் பெற்றோரிடமும், கொலை சம்பவம் நடைபெற்ற நாகர்கோவில் மாவட்ட சிறைச்சாலை, ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி ஆகிய இடங்களில் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

சிறைச்சாலையில் விசாரணை மற்றும் சம்பவம் நடைபெற்ற சிறை அறையில் கேமரா மூலமும் பதிவு செய்தனர். இந்த வழக்கில் சபரிவர்மனை கைது செய்த, தென்தாமரைக்குளம் காவல் நிலைய போலீசாரிடமும் சிபிசிஐடி விசாரணை தொடங்கி உள்ளனர். அவர் மீது இதற்கு முன் இருந்த வழக்குகள் விபரம், அதன் நிலை என்ன? என்பது விபரத்தை சேகரித்துள்ளனர். தென்தாமரைக்குளம் போலீசார் கடைசியாக சபரிவர்மனை கைது செய்து பதிவான வழக்கு எண் 147 /2026 ஆகும். முதலில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, பின்னர் பி.என்.எஸ்.123 பிரிவு சேர்க்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். 14 பாக்கெட்டுகளுக்கு ஏன்? இந்த பிரிவு என்ற கேள்வி எழுந்தது.

இது குறித்தும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். ஏற்கனவே சபரிவர்மன் குடும்பத்தினரிடமும் விசாரணை தொடர்ந்து நடக்க உள்ளது. காவல் நிலையத்தில் நடந்தது என்ன? கடைசியாக சபரிவர்மனை சிறையில் சந்தித்த போது அவரது மனைவியிடம் என்ன தெரிவித்தார்? என்பன போன்ற விபரங்களையும் சிபிசிஐடி போலீசார் சேகரிக்கிறார்கள். அடுத்த கட்டமாக சிறையில் உள்ள சிறை வார்டன்கள், கைதிகளிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக சிபிசிஐடி போலீசார் கூறினர்.

Tags : Nagercoil ,Sabarivarman ,CBCID ,Thenthamaraikulam ,Eathangadu ,Suchindram ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து