சென்னை: மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து வரும் 27ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்றத் தொகுதி மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியிருப்பதாவது: நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து டெல்லியில் மாணவர்களும் இளைஞர்களும் போராடி வருகின்றனர்.
இது தொடர்பாக காக்ரோச் ஜனதா பார்ட்டி நடத்திய பேரணியில் மோடி அரசின் காவல்துறை கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. ஏராளமான மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள் என்பதை இதுவரை காவல் துறை தெரிவிக்கவில்லை. அவர்களை சந்திப்பதற்கு யாரும் அனுமதிக்கப்படவும் இல்லை.
போராடி வரும் மாணவர்களின் கோரிக்கைகளான கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்; போராடிய மாணவர்கள் மீது வன்முறை தாக்குதலை நடத்தியவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்தும், அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஜூலை 27ம் தேதி திங்களன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்றத் தொகுதி மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
