×

பட்டுகோட்டையில் காலாவதியான 120 பீர் பாட்டில்கள் அழிப்பு

 

பட்டுகோட்டை: பட்டுகோட்டையில் உள்ள உயர்ரக குளிர்சாதன மதுபானக்கூடத்தில் காலாவதியான பீர் வழங்கப்பட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை கலால்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். 120 பீர் பாட்டில்கள் கண்டறியப்பட்டு கொட்டி அழிக்கப்பட்டது. பட்டுக்கோட்டையில் சின்னையா தெருவில் அரசு அனுமதியோடு செயல்பட்டுவரும் உயர்ரக குளிர்சாதன மதுபானக்கூடத்தில் (ஏ/சி பாரில்) 3 பீர் வாங்கினால் சிக்கன் 65 மற்றும் சிக்கன் இலவசம் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தை பார்த்த ஒருவர் குளிர்சாதன மதுபான கூடத்திற்கு பீர் குடிக்க சென்றபோது காலாவதியான பீர் வழங்கியதாக கூறப்படுகிறது.

அதற்கு முன்பு கொடுத்த பீரும் புளித்துப் போய் இருந்ததாகவும் கூறப்படுகிறது. காலாவதியான பீரில் தேதி மட்டும் கிழிக்கப்பட்டிருந்தது ஏன்? என அந்த உணவகத்தில் விளக்கம் கேட்டபோது, அதுபற்றி எங்களுக்கு தெரியாது. மேலாளர் அல்லது உரிமையாளரிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று விற்பனையாளர் கூறியதால் காவல் நிலையத்திலும், உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் புகார் கொடுக்க உள்ளதாகவும், இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பீர் வாங்கிச் சென்றவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் பட்டுக்கோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையிலான அதிகாரிகள் ஏ/சி பாரில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது காலாவதி தேதி, தயாரிப்பு தேதி குறிப்பிடப்படாமல் பாதுகாப்பற்ற முறையில் 110 அரை லிட்டர் மற்றும் 1 லிட்டர் குடிநீர் பாட்டில்கள் வைத்திருந்த குற்றத்திற்காக அந்த ஏ/சி பார் நிறுவனத்திற்கு ரூபாய் 25,000 அபராதம் விதித்தனர்.‌ அதனைத் தொடர்ந்து கலால்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் இன்று காலாவதி ஆகவுள்ள 120 பீர் பாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்த பீர் பாட்டில்களுடன் சேர்த்து விற்பனைக்காக வைத்திருப்பது கண்டறியப்பட்டது. உடனே அந்த 120 பீர் பாட்டில்களையும் அதே இடத்தில் கலால்துறை அதிகாரிகள் கொட்டி அழித்தனர்.

Tags : Patukota ,Patugota ,Food Protection Department ,Sinnaia Street ,Patukkotta ,
× RELATED ஜனநாயகன் படம் தீபாவளி, பொங்கல்...