சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்திற்கு நகராட்சி நிர்வாக துறை டெண்டர் கோரியுள்ளது. அதில், தரமான மற்றும் சத்தான உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. காலை உணவு திட்டத்தில் உணவு வழங்குபவர்களை தேர்வு செய்வதற்கான டெண்டர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த டெண்டரில், பள்ளி குழந்தைகளுக்கு தரமான மற்றும் சத்தான உணவு வழங்குவதை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட சமையல் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த திட்டத்தின்படி, 3 மாநகராட்சிகளில் உள்ள 3 ஒருங்கிணைக்கப்பட்ட சமையல் கூடங்கள் மற்றும் 112 நகராட்சிகளில் உள்ள 113 ஒருங்கிணைக்கப்பட்ட சமையல் கூடங்கள் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு தரமான உணவு சமைத்து விநியோகிக்கப்பட வேண்டும்.
இதில் பங்கேற்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், நகர்ப்புற வாழ்வாதார குழுக்கள், சமுதாய சேவை அமைப்புகள் மற்றும் புது தொழில் தொடங்கும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு பள்ளிகளில் காலை உணவு வழங்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
