×

தவெக அரசு எத்தனை பேரை சிறை வைக்கும்? வழக்கு போட்டு அழிக்கலாம்ன்னு நினைச்சா உலக மகா மடத்தனம்: ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்

 

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று அளித்த பேட்டி: விளாத்திக்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் முதல்வர் விஜய்யை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்துள்ளனர். இதுபோன்ற அச்சுறுத்தல்களை எல்லாம் கண்டு பயப்படுகின்ற கட்சி அல்ல திமுக. ஜனநாயகத்தில் சகிப்பு தன்மை வேண்டும், விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிற மனப்பான்மை வேண்டும். இன்றைக்கு இருக்கக்கூடிய ஆட்சிக்கு அது அறவே இல்லை என்பதை இந்த 60 நாளில் நிரூபித்து விட்டார்கள். திமுக எம்எல்ஏ அனிதாராதாகிருஷ்ணன் பேசினார். உடனே அவர் கைது செய்யப்பட்டார். இவர் இரண்டாவது எம்எல்ஏ கைது செய்யப்படுறார்.

அதாவது இது எதைக் காட்டுகிறது என்றால், மற்ற கட்சியில் இருந்தெல்லாம் எம்எல்ஏக்களை பல்வேறு வகையில் கட்சி மாற்றி அவர்கள் சேர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் திமுகவில் இருக்கிற எம்எல்ஏக்கள் வைரம் போன்ற தொண்டர்களாக இருக்கிற காரணத்தினால் அவர்களை மாற்றி கட்சியில் சேர்க்க முடியாது என்பதற்காக இப்படிப்பட்ட வழிகளை இந்த அரசு கையாளுகிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய அளவுக்கு இந்த நடவடிக்கை இருக்கிறது.

நாங்கள் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்க கூடியவர்கள். ஆகவே சட்ட ரீதியாக அதை சந்திப்பதற்கு திமுக தயாராக இருக்கிறது. அவர் அப்படி பேசி இருந்தா வழக்கு போடலாம். வழக்கை நீதிமன்றத்தில் நடத்தலாம். கைது செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆக மன உளைச்சலைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் திமுகவினர் கைது செய்யப்படுகிறார்கள். எங்களை மட்டும் அல்ல சமூக வலைதளங்களில் கருத்து போடுபவர்களை கூட காவல்துறை கைது செய்கிறது. அதேபோல நெறியாளர் விஜயனை இந்த காவல்துறை விசாரணை என்ற பெயரில் அத்துமீறி நடந்துள்ளது. இதெல்லாம் தமிழ்நாட்டில் இதுவரை பார்க்காதது, இதெல்லாம் இப்போது நடக்கிறது.

ஆனால் அதே நேரத்தில் கொலையும் கொள்ளையும் பாலியல் வன்கொடுமையும் தினம் தினம் நடந்து கொண்டிருக்கிறது. காவல் துறைக்கு அந்த வேலை பார்ப்பதற்கு நேரமில்லாமல் திமுகவையும் இந்த ஆட்சியை விமர்சிக்கிறவர்களையும் கைது செய்து கொண்டுள்ளது. எவ்வளவு பேரை கைது செய்து சிறை வைக்க முடியும். இதற்கு முன்பெல்லாம் அவதூறு பேச்சிற்காக யாரும் கைது செய்யப்பட்டதில்லை. உண்மைகளை பேசுகிற போது அது ஏற்றுக்கொள்கிற மனப்பான்மை இருக்க வேண்டும்.

இனியாவது தன்னை திருத்தி கொள்ளவேண்டும். திமுக மீது வழக்குப் போட்டு ஜெயிலுக்கு அனுப்பி அழிச்சிடலாம்னு நினைச்சா அவனை விட உலக மகா மடையன் யாரும் இருக்க முடியாது. ஆகவே இதுபோல எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம். ஆனால் இது அரசாங்கத்துக்கும் மக்களுடைய வரிப்பணத்துக்கும் வீணான செலவு என்பதுதான் எங்களுடைய கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Richa World Grand Monastery ,R. S. Bharathi ,CHENNAI ,SECRETARY OF THE DIMUKA ORGANIZATION ,R. S. Bharati ,Vratathikulam Dimuka ,Markandeyan ,Vijay ,DIMUKA ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து