×

மதுரை பெரியார் தோரண நுழைவாயில் இடிப்பு

மதுரை: மதுரை கேகேநகரின் பிரதான பெரியார் தோரண நுழைவாயில் ஐகோர்ட் கிளை உத்தரவின்பேரில் நேற்று அதிகாலை இடித்து அகற்றப்பட்டது. மதுரையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகே கேகே நகர் சந்திப்பிலும், வில்லாபுரம் அருகே தெற்குவாசல், விமான நிலையம் செல்லும் சாலை, விராட்டிப்பத்து அருகே தேனி சாலையிலும் என கட்டப்பட்டுள்ள நுழைவாயில் வளைவுகளை அகற்றிட, அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து தோரண நுழைவாயில்களை இடித்து அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. ஐகோர்ட் கிளை உத்தரவின்பேரில், நேற்று அதிகாலை மதுரை மாநகராட்சி, மாவட்ட அதிகாரிகள் முன்னிலையில் மதுரை கேகே நகரில் இருந்த பெரியார் நூற்றாண்டை ஒட்டி கட்டப்பட்ட பெரியார் தோரண வாயில் நுழைவுவாயிலை இடித்து அகற்றப்பட்டது. இதற்கென கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டனர்.

மருத்துவப் பணியாளர்களுடன் கூடிய ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனத்துடன், மீட்புக்கான வீரர்கள் மற்றும் மாவட்ட, மாநகராட்சி அதிகாரிகள் நிறுத்தப்பட்டு பணிகள் நடந்தது. இடிக்கப்பட்ட தோரண நுழைவு வாயில் அருகிலேயே தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் பாதிக்காத வகையில் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டது. அதிகாலை 12.30 மணியளவில் புல்டோசர் மூலம் இருபுற தரைப்பகுதி இடித்து அருகாமை கட்டுமான பகுதிகளுக்கு எவ்வித பாதிப்புமின்றி லாவகமாக பணியாளர்கள் இந்த நுழைவு வாயிலை இடித்து அகற்றினர்.

மதுரையில் 1981ல் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடந்தபோது, மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகே அமைக்கப்பட்ட நக்கீரர் தோரண வாயில் கடந்தாண்டு பிப்ரவரியில் இடித்து அகற்றப்பட்டது. போக்குவரத்து நெரிசல் காரணங்களை காட்டி, இத்தோரண வாயிலை இடித்து அகற்றியதற்கு பழமை ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்தது. இதன்தொடர்ச்சியாக தற்போதும் மதுரை கேகேநகர் பெரியார் தோரண வாயில் இடித்து அகற்றப்பட்டிருப்பதற்கும் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.

* அதே பெயரில் மீண்டும் அமைக்கப்படுமா?
மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்ட் அருகாமையிலும், தற்போது கேகே நகரிலும் தோரண வாயில்கள் இடிக்கப்பட்டிருக்கிறது. பழமை மாறாத வகையில் அந்தந்த பெயர்களில் (நக்கீரர், பெரியார்) புதிய விசாலமான தோரண வாயில்களை அமைத்து தருவது மதுரையை வரலாற்று ரீதியாகவும், அழகியல் ரீதியாகவும் மேம்படுத்தும். எனவே இப்புதிய தோரண வாயில்களை வருங்கால போக்குவரத்து திட்டமிடலோடு அமைத்திட வரலாற்று, பழமை ஆர்வலர்களின் கோரிக்கை வலுத்துள்ளது.

Tags : Madurai Periyar Thorana ,Madurai ,Periyar Thorana ,Madurai KK Nagar ,Court ,KK Nagar ,Mattutthavani ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து