×

வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்: அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நீட் வினாத்தாள்கள் கசிவு முறைகேட்டை கண்டித்து மாநில வாரியாக மாணவர்களிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை ராகுல்காந்தி கேட்டறிந்து வருகிறார். தமிழ்நாட்டிலும் இந்த நீட் தேர்வு என்பது சமத்துவம், சமூக நீதி, சுயாட்சிக்கு எதிரானது. நாடு தழுவிய அளவில் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மிகப்பெரிய போராட்டத்தை காங்கிரஸ் கட்சி முன்னெடுத்து உள்ளது.

வினாத்தாள் கசிவு என்பது இந்த ஒரு முறை அல்ல, பலமுறை நடந்து உள்ளது. இந்த முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். தமிழ்நாட்டிலும் மாணவர்களை ஒருங்கிணைத்து காங்கிரஸ் கட்சி இந்த பிரச்னைக்காக தொடர்ந்து போராடும்.

தமிழக அரசு நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது என்பதை கவர்னர் உரையின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், துணை தலைவர் கோபண்ணா, பொதுச்செயலாளர்கள் சிரஞ்சீவி, காண்டீபன், எஸ்.ஏ.வாசு, செழியன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags : Dharmendra Pradhan ,Minister ,Rajesh Kumar ,Chennai ,Congress ,Sathyamoorthy Bhavan ,Rahul Gandhi ,NEET ,Tamil Nadu ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து