சென்னை: நடப்பு ஜூலை மாதத்தில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், குறிப்பிடத்தக்க மழை ஏதுமின்றி வறண்ட வானிலையே நிலவி வருகிறது. அதே நேரத்தில், மேற்கு கடற்கரை பகுதிகளில் பலத்த மழையும், தென் தமிழகப் பகுதிகளில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்து வருகிறது. இந்த மாறுபட்ட வானிலை நிலவரத்திற்குப் பின்னணியில் உள்ள அறிவியல் காரணங்களை வானிலை ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.
ஜூலை மாதத்தில் பொதுவாக வெயில் உக்கிரமாக இருக்கும் வேளையில், தற்போதைய மேகமூட்டம் சூரியக் கதிர்களைத் தடுத்து, சென்னையின் வெப்பநிலையை 35 முதல் 36 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்தியுள்ளது. இருப்பினும், தென்மேற்கு பருவக்காற்று அரபிக்கடலில் இருந்து அதிக ஈரப்பதத்துடன் வந்து மேற்கு தொடர்ச்சி மலையில் மோதி, கேரளா மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் முழுமையாக மழையைக் கொடுத்து விடுகிறது.
இந்த மலை அரணைத் தாண்டி வரும் காற்று, தன் ஈரப்பதத்தை இழந்து வறண்ட காற்றாக கிழக்குச் சரிவுகளில் இறங்குகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு மழை நிழல் பிரதேசத்தில் அமைந்திருப்பதால் சென்னைக்கு இந்த பருவமழையால் பெரிய அளவில் மழை கிடைப்பதில்லை. சென்னையில் இரவில் மழை வருவது ஏனென்றால் மேற்கு தொடர்ச்சி மலைகள் அனைத்து ஈரப்பதத்தையும் முழுமையாக உறிஞ்சுவதில்லை.
மேற்கு கடற்கரையில் பருவமழை தீவிரமாக இருக்கும்போது, எஞ்சியிருக்கும் ஈரப்பதம் மேற்கு திசைக் காற்று வழியாகத் தீபகற்பத்தைக் கடந்து, மாலை அல்லது இரவு நேரங்களில் சென்னையை வந்தடைகிறது.இரவு நேரத்தில் பகல் நேரக் காற்று சுழற்சி நின்றுவிடுவதாலும், மேகங்களின் மேற்பகுதி குளிர்வடைவதாலும் வளிமண்டலம் நிலைத்தன்மையற்றதாக மாறுகிறது. இதன் காரணமாகவே, சென்னை மக்கள் தூங்கும் நள்ளிரவு அல்லது அதிகாலை வேளையில் லேசானது முதல் மிதமான மழை பெய்கிறது.
தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக் காரணம் இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய தென் மாவட்டங்களில் இரு வேறு திசைக் காற்றுகள் ஒன்றோடொன்று மோதுகின்றன. பகல் முழுதும் நிலப்பரப்பு வெப்பமடைவதால், மதியத்திற்குப் பிறகு வளிமண்டலத்தில் அதிக ஆற்றல் சேமிக்கப்படுகிறது.அதே நேரத்தில், மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தியிலிருந்து குளிர்ந்த, ஈரப்பதமிக்க கடல் காற்று நிலப்பகுதியை நோக்கி வீசுகிறது.
இந்த கடல் காற்றும், நிலப்பரப்பின் வெப்பமான வறண்ட மேற்குக்காற்றும் மோதும் எல்லையில், காற்று வேகமாக மேல்நோக்கித் தள்ளப்படுகிறது. இந்த ஈரப்பதம் குளிர்ந்து பெரிய இடிமேகங்களாக உருவெடுக்கின்றன. இதன் காரணமாகவே தென் தமிழகத்தில் மாலை நேரங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்கிறது.
