×

திருச்செந்தூரில் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் மக்கள் பணிகளை தடையின்றி செய்வேன் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ உறுதி


திருச்செந்தூர், மார்ச் 15: சட்டப்பேரவைக்கு அனுப்பினால் மக்களுக்கான பணிகளை எவ்வித தடையும் இன்றி செய்வேன் என திருச்செந்தூரில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ உறுதியளித்தார். திருச்செந்தூரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் வக்கீல் சந்திரசேகரன் தலைமை வகித்தார். திமுக மருத்துவ அணி மாநில துணை அமைப்பாளர் டாக்டர் வெற்றிவேல், மாணவர் அணி மாநில துணைச்செயலாளர் உமரி சங்கர், மதிமுக. மாவட்டச் செயலாளர் புதுக்கோட்டை செல்வம், விசிக மண்டல செயலாளர் தமிழினியன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் அழகுமுத்து பாண்டியன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் ஆசாத், இந்திய யூனியன் முஸ்லிம் லிக் மாவட்டச் செயலாளர் மகமதுல் ஹாசன், ஆதித்தமிழர் பேரவை மாவட்டத் தலைவர் சந்தானம், தவாக மாவட்டச் செயலாளர் மாரிச்செல்வம் முன்னிலை வகித்தனர். திமுக ஒன்றியச் செயலாளர் செங்குழி ரமேஷ் வரவேற்றார்.

கூட்டத்தில் திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் வேட்பாளரும், தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேசுகையில், ‘‘ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் திமுகவில், ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு வாழ்ந்து வருகிறேன். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மக்களுக்கு முழுசேவை செய்ய விடாமல் பல்வேறு இடையூறுகளை செய்தனர். தற்போது திமுக தலைவர் முதல்வராகும் நிலை உருவாகியுள்ளது. எனவே, என்னை சட்டப்பேரவைக்கு அனுப்பினால், மக்களுக்கு செய்யவேண்டிய அனைத்துப்பணிகளையும் எவ்வித தடையும் இல்லாமல் செய்வேன். கடந்த மக்களவைத் தேர்தலில் 39 எம்.பி.க்கள் வெற்றிபெற்றது ஸ்டாலின் மீதான நம்பிக்கையை வெளிக்காட்டியது. இத்தேர்தலில் கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஸ்டாலின் அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை அதிமுகவினரை கலக்கமடைய செய்துள்ளது. உங்களின் சகோதரனான என்னை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நாட்டை குட்டிச் சுவராக்கியுள்ள அதிமுகவினரை விரட்டுங்கள்’’ என்றார்.

கூட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பில்லா ஜெகன், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் இளைஞர் அணி ராமஜெயம், மீனவர் அணி தர் ரோட்ரிகோ, வக்கீல் அணி ஜெபராஜ், இலக்கிய அணி ராஜபாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச்செயலாளர் கருப்பன், வட்டார காங்கிரஸ் தலைவர் சத்குரு மதிமுக ஒன்றியச் செயலாளர் முருகன், மார்க்சிஸ்ட் ஒன்றியச் செயலாளர் முத்துக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் ஆண்டி, விசிக ஒன்றியச் செயலாளர் சங்கத்தமிழன், ஆதித்தமிழர் பேரவை ஒன்றியச் செயலாளர் அஜித், தவாக ஒன்றியச் செயலாளர் தங்கதுரை உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். நகர திமுக  பொறுப்பாளர் வாள் சுடலை நன்றி கூறினார்.

Tags : DMK ,Anita Radhakrishnan ,MLA ,Thiruchendur ,
× RELATED ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட...