×

பழனிக்கே மொட்டை போட்டுள்ளது விஜய் ஆட்சி ரூ.100 கோடி நில மோசடியில் மிகப்பெரிய சதி: குற்றவாளிகளை காப்பாற்றும் அறநிலையத்துறை அமைச்சர்: திமுக நிர்வாகி பரந்தாமன் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: திமுக சட்டத்துறை இணை செயலாளர் இ.பரந்தாமன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 1.41 ஏக்கர் நிலத்தை தனியார் இருவர் பதிவு செய்துள்ளனர். இதுபற்றி இரண்டு அமைச்சர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசி வருகின்றனர். கடந்த திமுக ஆட்சியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தை கைப்பற்றி கோயில் கார் பார்க்கிங்கிற்காக பயன்படுத்தப்பட்டது.

ஆனால் இந்த நிலம் இப்போது திடீரென தனியார் பெயரில் பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இதன் பின்னால் பெரிய அளவில் சதி நடந்துள்ளது. பினாமி பெயரில் பத்திரப்பதிவு நடந்துள்ளது. இந்த விவகாரத்தைப் பற்றி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பேசும்போது, அறியாமையின் காரணமாக அதிகாரிகள் இதை பதிவு செய்திருக்கிறார்கள் என கூறுகிறார். விசாரணை தொடங்காத போது அமைச்சரே முன் வந்து இப்படி சொல்வது என்பது குற்றவாளிகளை காப்பாற்றி குற்றத்தை மறைக்க அமைச்சரே துணை போகிறார் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.

ஜூலை 2ம்தேதி இந்து சமய அறநிலைய துறையின் சார்பாக கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் 3ம்தேதி இந்த பத்திர பதிவு செய்ய சொல்லி அதற்கான ஆவணங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்கப்படுகிறது. அன்றைக்கு இருந்த சார்பதிவாளர் பழனிசாமி என்பவர், ‘இவற்றை நான் பதிவு செய்ய மாட்டேன் ஏனென்றால் ஏற்கனவே கடிதம் இருக்கிறது’ என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு 3ம்தேதி பாலசுந்தரம் என்கின்ற ஒரு பதிவாளர் அன்றைக்கு பணியமர்த்தப்படுகிறார்.

அவர் இந்த ஆவணங்களை வாங்கிக் கொண்டு ‘நான் பத்திரப் பதிவு பண்ண மாட்டேன்’ என்று சொல்லி விட்டு அவர் விடுப்பில் சென்று விடுகிறார். பிறகு 6ம்தேதி திங்கட்கிழமை பத்திரப்பதிவு நடந்துள்ளது. 6ம்தேதி அன்று பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ளவர்கள் லீவ் போட்டு போய்விட்டார்கள். அரசு திட்டமிட்டு 70 கி.மீ., தொலைவில் உள்ள கொடைக்கானல் பகுதி அதிகாரியைக் கொண்டு வந்து பொறுப்பில் அமர்த்தியது.

அதிலும் குறிப்பாக, வழக்கமான ஆவணங்களைப் பதிவு செய்யும் சார்பதிவாளர் அல்லாமல், சிட் பண்ட் பிரிவைச் சேர்ந்த மாவட்ட பதிவாளர் மணிகண்டன் என்பவரை அவசரமாக அழைத்து வந்து அன்றைய தினமே பத்திரப் பதிவு நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலத்தை வாங்கியதாகக் கூறப்படும் இரு நபர்கள் சேதுபதி மற்றும் வெள்ளத்துரை ஆவர். சேதுபதி என்பவர் ஏற்கனவே இதுபோன்ற பல சர்ச்சைக்குரிய நில விவகாரங்களைக் கையாளுபவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்னொரு வேடிக்கை என்னவென்றால், இந்த விவகாரத்தில் அரசுத் தரப்பில் ஒவ்வொருவரும் ஒரு கருத்தைக் கூறி உண்மையை மறைக்க முயல்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி செய்கிறார். அதாவது, அதிகாரிகளின் அறியாமை காரணமாக இந்த பதிவு நடந்துவிட்டது என்று கூறி அதிகாரிகளை காப்பாற்ற அமைச்சர் முயற்சிக்கிறார். பதிவுத்துறை அமைச்சர் நீதிமன்ற உத்தரவின்படி ஆவணங்கள் சரியாக இருந்ததால் தான் பதிவு செய்யப்பட்டது என்கிறார்.

நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் அறநிலையத் துறையின் கடிதம் மறைக்கப்பட்டு, அழுத்தத்தின் காரணமாகவே சார்பதிவாளர் இதனைப் பதிவு செய்துள்ளார் என்று வாதாடுகிறார். யார் அந்த அழுத்தத்தை கொடுத்தது. நீதிமன்ற வழக்கு இருக்கு, கோயிலுக்கு சொந்தமான நிலம் என்ற பதிவேட்டில் இருக்கும்போது இதை சார் பதிவாளர் வெரிபை பண்ண வேண்டும். இதை எல்லாம் செய்யாமல் இவர்கள் பதிவு செய்கிறார்கள் என்று சொன்னால் இதில் மிகப் பெரிய சதி இருக்கிறது. இதில், பினாமி பரிவர்த்தனை நடந்துள்ளது என்ற சந்தேகம் எழுகிறது.

இந்த நிலம் பதிவு செய்யப்பட்டதாக கிரயம் செய்திருக்க கூடிய அந்த இரண்டு நபர் இதுவரை யார் என்று போலீஸ் தரப்பில் காட்டவில்லை. அவர்கள் இரண்டு பேருக்கும் ஒரு சொத்தை வாங்குவதற்கான பொருளாதார ரீதியில் பலமாய்ந்தவர்கள் இல்லை என்பது எங்களுடைய விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அப்படி இருக்கும்போது எப்படி ரூ.2 கோடிக்கு இவர்கள் பண பரிவர்த்தனை செய்ய முடியும்?

எனவே, இதன் பின்னணியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெரிய பினாமிகள் இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. அமைச்சர்கள் கோட்டையில் உட்கார்ந்து கொண்டு முரண்பாடான கருத்துகளைப் பேசி உண்மையை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில் பினாமி பரிவர்த்தனை நடந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் எங்கு மாட்டிக் கொள்வோமோ என்ற பதற்றம் அமைச்சர்களுக்குள் எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் பழனி கோயில் நில மோசடி பற்றி பதிவிட்ட நபர் விரைந்து கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் கேள்வி கேட்பவர்களை இரவில் பாய்ந்து பாய்ந்து கைது செய்யும் தவெக அரசு, மோசடியில் ஈடுபட்ட சார்பதிவாளரையோ அல்லது அதன் பின்னணியில் உள்ளவர்களையோ ஏன் இன்னும் கைது செய்யவில்லை.

பழனிக்கு மொட்டை போடுவாங்கன்னுதான் நாமெல்லாம் பார்த்தோம், பழனிக்கே மொட்டை போட்ட ஆட்சி விஜய் ஆட்சி. இதில் முறையான விசாரணை நடந்து குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால், திமுக சட்டத்துறை சார்பில் நீதிமன்றத்தை நாடத் தயங்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Vijay ,Palanike ,Ministry of Finance ,Minister ,Dimuka ,Executive ,Bharandaman Bharappu ,Chennai ,Deputy Secretary of ,Dimuka Legal Department ,E. Bharandaman ,Anna Adhiwalayat ,Palani Murugan Temple ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து