×

நிறுவனங்கள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு: உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

சென்னை: சென்னை பெரும்பாக்கத்தில் ராம்சார் அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் பிரிகேட் மார்கன் ஹைட்ஸ்என்னும் நிறுவனத்திற்கு 1250 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, வனத்துறை, சென்னை பெருநகர கட்டுமான குழுமமும், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையமும் அனுமதி வழங்கியிருந்து. இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதை தொடர்ந்து கட்டுமான அனுமதியை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 2025 அக்டோபர் மாதம் கட்டுமானத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கடந்த மே 8ம் தேதி நடைபெற்ற மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையக் கூட்டத்தில், பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் அதிநவீன அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது.

குறிப்பாக, தமிழ்நாடு ஈரநில ஆணையத்தின் தடையில்லா சான்று பெறாமல் கட்டுமானத்தைத் துவங்க கூடாது என்ற நிபந்தனை மீறப்பட்டதால் சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. மேற்கண்ட மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய முடிவை எதிர்த்து பிரிகேட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் மற்றும் மார்கன் ஏசியா பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்ஷி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தனியார் நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், சுமார் ரூ.2000 கோடி மதிப்பீட்டிலான இந்த அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது, அதேபோல் உயர் நீதிமன்றமும் ஒரு பொதுநல மனுவை ஏற்று கட்டுமானத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

இதுபோன்ற நடவடிக்கையால் கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்த நிறுவனங்கள் தவித்து வருகின்றன. எனவே இந்த நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இருப்பினும் அதே நேரத்தில் சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக ஏதேனும் குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்ய நிறுவனங்கள் தரப்பில் தயாராக இருக்கிறார்கள் என்று விளக்கமளித்தார்.

இதை தொடர்ந்து நிறுவனங்களின் வாதங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிப்பிரியா, \‘‘சுற்றுச்சூழல் அனுமதி குறித்த விவகாரங்களை கையாள தேசிய பசுமை தீர்ப்பாயம் இருக்கிறது. அதுதான் உரிய அமைப்பு ஆகும். எனவே இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க கூடாது’’ என்று தெரிவித்தார்.  இதை தொடர்ந்து நீதிபதிகள், ‘‘சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டிருந்தால் முதலில் நீங்கள் உயர் நீதிமன்றம் அல்லது தேசிய பசுமை தீர்ப்பாயத்தை தான் அணுகியிருக்க வேண்டும்.

ஆனால் உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக ரிட் மனு தாக்கல் செய்ததை ஏற்க முடியாது. எனவே ஆர்டிக்கல் 32ன் விதியின் அடிப்படையில் இந்த வழக்கை நாங்கள் விசாரிக்க இயலாது’’ என திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் அல்லது தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகி மனுதாரர் தங்கள் கோரிக்கையை முன் வைக்கலாம். அவ்வாறு வைக்கப்படும் கோரிக்கை மீது விரைவாக விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த விவகாரத்தில் கட்டுமான நிறுவனங்களின் மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : Pallikaranai wetland ,Supreme Court ,Chennai ,Tamil Nadu Environment Department ,Forest Department ,Chennai Metropolitan Construction Group ,State Environmental Impact Assessment Board ,Brigade Morgan Heights ,Ramsar ,Perumbakkam, Chennai ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து