×

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்

சென்னை: எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு ஜூலை 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 2026-27ம் கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூன் 29ம் தேதி தொடங்கியது. www.tnmedicalselection.org என்ற இணையதளம் மூலம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வந்தனர்.

இந்த ஆண்டு, நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது. இதன் மூலம் மாணவர்கள் முன்கூட்டியே தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு மருத்துவ மாணவ சேர்க்கை குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் நீட் மறுதேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியானதைத் தொடர்ந்து விண்ணப்ப பதிவுக்கான இறுதி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக தேர்வுக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை வருகிற ஜூலை 23ம் தேதி மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை 41,000-க்கும் மேற்பட்ட முழுமையான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் அனைத்தையும் ஆய்வு செய்தல், தகுதியற்ற விண்ணப்பதாரர்களின் பட்டியல் வெளியிடுதல், அவர்களுக்கான குறைதீர் வாய்ப்பு வழங்குதல் மற்றும் மருத்துவ கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளதால்,  ஜூலை 23ம் தேதிக்குப் பிறகு எந்தவித கால நீட்டிப்பும் வழங்கப்படாது. எனவே, மாணவர்கள் கடைசி நாளுக்காக காத்திருக்காமல் விரைவாக தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : MBBS ,BDS ,Chennai ,Tamil Nadu Medical Selection Board ,Tamil Nadu ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து