×

விஜய் ரசிகர் மன்ற தலைவரை போல செயல்படும் துரை வைகோ தவெக-பாஜவை இணைக்க மீடியேட்டராக மாறிய வைகோ: மல்லை சத்யா குற்றச்சாட்டு

திருச்சி: விஜய் ரசிகர் மன்ற தலைவரை போல வைகோ, துரை வைகோ செயல்படுகின்றனர். தவெக-பாஜவை இணைக்க மீடியேட்டர் வேலையை வைகோ செய்து வருகிறார் என மல்லை சத்யா குற்றம்சாட்டி உள்ளார்.  திராவிட வெற்றி கழக தலைவர் மல்லை சத்யா திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மாயாஜால வித்தையை போல சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவேன் என்று முதல்வர் விஜய் கூறினார். ஆனால் நாள்தோறும் படுகொலை நடக்காத நாட்களே இல்லை.

பலாத்காரம், பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடக்காத நாட்களே இல்லை என்ற நிலைமை தான் நாள்தோறும் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் தவெக பட்ஜெட் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு நிறைவேற்ற வேண்டும். மதுபான கடைகளை மூடுகிறோம் என்று சொல்லிவிட்டு இப்பொழுது ரெஸ்டோ பார் என்று சொல்லப்படுகின்ற உணவகத்துடன் கூடிய மதுபான கடைகளை திறக்க போவதாக செய்திகள் வருவது அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது. இது கூடாது.

மதிமுகவில் இருந்து பலர் விலகியிருப்பதை வேறு கட்சியில் இணைந்தது போல சித்தரிப்பது சரியல்ல. எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம் குறித்து அரசியல் கட்சிகள் தெளிவான நிலைப்பாட்டை வெளியிட வேண்டும். தேர்தலில் பணம் கொடுக்கப்படவில்லை என்று கூற முடியாது. தேர்தல் செலவுகளுக்காக பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பப்பட்டதை நேரடியாக அறிந்திருக்கிறேன். எனவே தேர்தல் தொடர்பாக இரட்டை நிலைப்பாடு எடுக்க கூடாது.

வைகோவின் தற்போதைய அரசியல் நடவடிக்கைகள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. அவர் தற்போது சொந்த கட்சி வேலையை விட்டுவிட்டார். பாஜ மாநில தலைவராக, பாஜ எம்பியாக இருந்து தற்போது இந்திய குடியரசு துணைத் தலைவராக உள்ள சி.பி. ராதாகிருஷ்ணன் மூலம் பாஜவையும், தவெக விஜய்யையும் இணைக்க ஒரு மீடியேஷன் பணியை வைகோ செவ்வனே செய்து கொண்டு வருகிறார். பல்வேறு கட்சிகளுக்கு இடையே இணைப்பு ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவது அவரது முந்தைய அரசியல் நிலைப்பாடுகளுடன் முரண்படுகிறது.

ஜனநாயக அரசியலில் கருத்து வேறுபாடுகளை ஜனநாயக முறையிலேயே அணுக வேண்டும். தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் ஒருமையில் பேசும் அரசியல் தவிர்க்கப்பட வேண்டும். வைகோவும், துரை வைகோவும் விஜய் ரசிகர் மன்ற தலைவரை போல செயல்படுகிறார்கள். விஜய்க்கு டூப் போடுகின்ற விதத்தில் வைகோ நடந்து கொண்டிருக்கிறார், அவர் நடித்துக் கொண்டிருக்கின்ற கதாபாத்திரம் விஜய்யை தோற்கடிக்கின்ற விதத்தில் அரங்கேறி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Durai Vaiko ,Vijay ,Vaiko ,Thaveka- ,BJP ,Mallai Sathya ,Trichy ,Dravida Vetri Kazhagam ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து